நியூயார்க்: நியூயார்க் நகரில் உள்ள புரூக்லின் கலை அரும்பொருளகத்தில் மே 31ஆம் தேதியன்று பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்த 29 பேரைத் தடுத்து வைத்துள்ளதாக அமெரிக்க காவல்துறை அதிகாரிகள் ஜூன் 1ஆம் தேதி தெரிவித்தனர்.
அவர்களில் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீது தாக்குதல், அத்துமீறி நுழைந்தது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட 16 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
ஏழு பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நியூயார்க் காவல்துறை தெரிவித்தது.
மே 31ஆம் தேதியன்று நியூயார்க் நகரின் புரூக்லின் கலை அரும்பொருளகத்தின் பல பகுதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததாக அதிகாரிகள் கூறினர்.
அரும்பொருளகத்தின் பிரதான நுழைவாயிலில் பதாகை ஒன்றைத் தொங்க வைத்தனர்.
வரவேற்புப் பகுதியின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
இதன் காரணமாக வழக்கமாக மூடும் நேரத்தைவிட ஒரு மணி நேரம் முன்னதாக அரும்பொருளகத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
புதிதாகப் பொருத்தப்பட்ட கலைப்பொருள்கள் சேதமடைந்ததாக அரும்பொருளகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அரும்பொருளகத்துக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தனது ஊழியர்களைத் தாக்கியதாகவும் வசைபாடியதாகவும் அவர் கூறினார்.
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் நியூயார்க்கில் பேரணி நடத்தினர். புரூக்லின் வழியாக அவர்கள் அணிவகுத்து சென்றுகொண்டிருந்தபோது அவர்களில் சிலர் அரும்பொருளகத்துக்குள் விரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

