தென்கொரிய வானில் 600 குப்பை பலூன்கள்

1 mins read
0df6fb89-1378-4776-a2c3-4be5961321e2
குப்பைகள் கட்டப்பட்ட பலூன்களை அப்புறப்படுத்தும் பணியில் தென்கொரிய ராணுவம் ஈடுபட்டது. - படம்: ஏஎஃப்பி

சோல்: குப்பைகள் தாங்கிய பலூன்களை தனது எல்லைப் பகுதியில் வடகொரியா பறக்கவிட்டதாக தென்கொரியா தெரிவித்து உள்ளது.

இரவு நேரத்தில் அத்தகைய 600 பலூன்களை வடகொரியா அனுப்பியதாக ஜூன் 2ஆம் தேதி (ஞாயிறு) சோல் கூறியது.

சிகரெட் சாம்பல், துணிகள், பழைய தாள்கள், பிளாஸ்டிக் போன்றவற்றை அந்த பலூன்கள் சுமந்து இருந்ததாக தென்கொரிய கூட்டு ராணுவத் தளபத்திய அலுவலகம் தெரிவித்தது.

சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை அந்தக் குப்பை பலூன்கள் தலைநகர் சோலில் பறந்ததாகவும் அது கூறியது.

எந்த இடத்தில் இருந்து பலூன்கள் பறக்கவிடப்பட்டன என்பதை தனது ராணுவம் கண்காணித்ததாகவும் பலூன்களை கீழிறக்கி அப்புறப்படுத்தும் பணியில் அது ஈடுபட்டதாகவும் அலுவலகம் குறிப்பிட்டது.

பெரிய பெரிய குப்பை பைகள் பலூன்களின் கீழே கட்டப்பட்டு இருந்தன.

ஏற்கெனவே மே 29ஆம் தேதியும் நூற்றுக்கணக்கான பலூன்களை தென்கொரியா மேல் வடகொரியா பறக்கவிட்டதாக சோல் கடும் சினத்துடன் கூறி இருந்தது.

குப்பைகளோடு மலம் நிறைந்த பைகளைச் சுமந்துகொண்டு அந்த பலூன்கள் தென்கொரியாவுக்குள் பறக்கவிடப்பட்டதாகவும் வடகொரியாவின் அடிப்படை நோக்கம் ஆபத்தானது என்றும் அது தெரிவித்து இருந்தது.

குறிப்புச் சொற்கள்