மாஸ்கோ: அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரேனை அமெரிக்கா அனுமதிக்கக்கூடாது என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையை அமெரிக்கா அலட்சியப்படுத்தினால் அழிவு நிச்சயம் என்று ரஷ்யத் துணை வெளியுறவு அமைச்சர் செர்கே ரியாப்கோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார்.
“ரஷ்யா விடுக்கும் எச்சரிக்கையைச் சாதாரணமாக எடைபோட்டால் அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படும் என்று அமெரிக்கத் தலைவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஏதோ ஒரு காரணத்துக்காக ரஷ்யா விடுக்கும் எச்சரிக்கையை அவர்கள் குறைத்து மதிப்பிடுகின்றனர்,” என்று திரு ரியாப்கோவ் கூறியதாக ஆர்ஐஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
நேட்டோ நெருப்புடன் விளையாடுவதாகவும் அதன் செயல்பாடுகள் உலகளாவிய நிலையில் மிக மோசமான போரைத் தொடங்கி வைக்கக்கூடும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமர் புட்டின் கடந்த வாரம் தெரிவித்தார்.
இதற்கிடையே, உக்ரேன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் அடையாளம் காணப்பட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் திருவாட்டி மாவ் நிங் ஜூன் 3ஆம் தேதியன்று தெரிவித்தார்.
பற்றி எரியும் நெருப்பில் சீனா எண்ணெய்யை ஊற்றி பிரச்சினையைப் பெரிதாக்கவில்லை என்று அவர் கூறினார்.
இந்நிலையில், ஜூன் மாத நடுப்பகுதியில் சுவிட்சர்லாந்தில் அமைதி உச்சநிலை மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் அந்த உச்சநிலை மாநாட்டிற்கு இடையூறு விளைவிக்க ரஷ்யாவும் சீனாவும் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

