துபாய்: விமானப் பயணிகள் எண்ணிக்கையும் வருமானமும் புதிய உச்சத்தை எட்ட இருக்கிறது.
2024ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ஐந்து பில்லியன் பயணிகள் விமானப் பயணம் மேற்கொள்வர்.
அதுமட்டுமல்லாது, விமானச் சேவைகளின் வருமானம் ஏறத்தாழ 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$1.35 டிரில்லயன்) எட்டும் என்று கூறப்படுகிறது.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு விமானப் போக்குவரத்துத் துறை உயிர்த்தெழுவதாக அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்தது.
இவ்வாண்டு விமானச் சேவைகளின் நிகர லாபம் 30 பில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அதன் நிகர லாபம் 25.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
இருப்பினும், இவ்வாண்டு மொத்த செலவினம் முன்னெப்போதும் இல்லாத அளவில் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த செலவினம் 9.4 விழுக்காடு அதிகரித்து 936 பில்லியன் அமெரிக்க டாலராக ஏற்றம் காணக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் தகவல்களை துபாயில் நடைபெற்ற அதன் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் சங்கம் தெரிவித்தது.
“கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது விமானச் சேவை நிறுவனங்களுக்கு மிக மோசமான இழப்பு ஏற்பட்டது. அதைக் கருத்தில் கொள்ளும்போது 30 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர லாபம் மாபெரும் சாதனையே,” என்று சங்கத்தின் தலைமை இயக்குநர் வில்லி வால்ஷ் கூறினார்.
“தனிநபர்களும் பொருளியல்களும் செழித்தோங்க விமானப் போக்குவரத்து மிகவும் முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. விமானச் சேவை நிறுவனங்களின் லாபத்தை உயர்த்துவதும் நிதி மீள்திறனை வலுப்படுத்துவதும் மிகவும் அவசியம்,” என்றார் அவர்.
கொவிட்-19 நெருக்கடிநிலை விமானப் போக்குவரத்துத் துறைக்குக் கடும் நெருக்குதலைத் தந்தது. விமானங்கள் தரையிலேயே முடங்கிக் கிடந்தன. அத்துறையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்தனர்.
2020ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு 183 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டதாக சங்கம் தெரிவித்தது.