ஜெருசலம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்வைத்துள்ள சண்டை நிறுத்த உடன்பாட்டில் பல்வேறு குறைகள் இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்கிறோம் என்று ஜூன் 2ஆம் தேதியன்று இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகுவின் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தற்போது உடன்பாட்டை ஏற்க சம்மதிக்கிறோம். அதில் குறைபாடுகளைக் களைய அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது என்று அந்த உதவியாளர் கூறியுள்ளார்.
“அது, சிறந்த உடன்பாடு அல்ல, அனைத்துப் பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்,” என்று பிரிட்டனின் சண்டே டைம்சுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நெட்டன்யாகுவின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான தலைமை ஆலோசகரான ஒபிர் ஃபாக் தெரிவித்துள்ளார்.
தீர்க்கப்படவேண்டிய பல விவகாரங்கள் இருந்தாலும் பிணைக்கைதிகளை விடுவிப்பது, அனைத்துலக பயங்கரவாத அமைப்பான ஹமாஸை ஒழிப்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
ஜூன் 2ஆம் தேதி பின்னேரத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தனித்தனியாக இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் யோவ் காலண்ட், நெட்டன்யாகுவின் அவசரகால கூட்டணியில் இணைந்துள்ள மிதவாதக் கொள்கைகளைப் பின்பற்றும் பென்னி காண்ட்ஸ் ஆகியோரிடம் காஸா உடன்பாடு குறித்து தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
திரு காண்ட்ஸிடம் பேசியபோது உடன்பாட்டை ஹமாஸ் தாமதமின்றி ஏற்றுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று திரு பிளிங்கன் வலியுறுத்தியுள்ளார்.
முழுமையாக போர் நிறுத்தப்பட வேண்டும் என்று ஹமாஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி இஸ்ரேலியப் படைகள் முழுமையாக காஸாவிலிருந்து மீட்கப்பட்டு காஸா மறுநிர்மாணத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் ஹமாஸ் கூறி வருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து ஆகியவற்றின் அதிகாரிகள் ஜூன் 2ஆம் தேதி கெய்ரோவில் சந்தித்துப் பேசினர். அப்போது பாலஸ்தீன வட்டாரத்தில் உள்ள ராஃபா எல்லைப் பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகள் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்று கெய்ரோ கட்டாயப்படுத்தியதாக இரண்டு எகிப்திய தற்காப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
கடந்த மே மாதம் ராஃபா மீது தீவிரத் தாக்குதலைத் தொடுத்த இஸ்ரேல், பாலஸ்தீனப் பகுதியில் உள்ள ராஃபா எல்லையைக் கைப்பற்றியது.
இது, எகிப்துக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ஒத்துழைப்பை நிறுத்தப் போவதாகவும் எகிப்து மிரட்டியது.
இந்த எல்லைப் பகுதி வழியாகத்தான் நிவாரணப் பொருள்களை விநியோகிக்கப்படுகின்றன. மக்கள் வெளியேறவும் இது, முக்கியப் பாதையாக உள்ளது.
இதற்கிடையே ஜூன் 2ஆம் தேதி நியூயார்க் நகரில் 5வது அவென்யூவில் ஆயிரக்கணக்கானவர்கள் ஹமாஸிடமிருந்து பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் பேரணி அமைதியாக நடைபெற்றது. ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

