ஜெனிவா: மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாலஸ்தீன அரசாங்கத்தை எல்லா நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தில் நிபுணர் குழு ஒன்று கேட்டுக்கொண்டு உள்ளது.
ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்த ஒரு வார காலத்திற்குள் நிபுணர்கள் இந்த வேண்டுகோளை விடுத்து உள்ளனர்.
அந்த மூன்று நாடுகளின் அறிவிப்பு இஸ்ரேலுக்கு சினமூட்டியது.
காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்த பின்னர் கடந்த எட்டு மாதங்களாக, தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக பாலஸ்தீனம் கருதுகிறது.
எனவே, அதனை அங்கீகரிக்க ஐநா நிபுணர் குழு கோருகிறது. அந்தக் குழுவில் பாலஸ்தீன எல்லைப் பகுதியில் நிலவும் மனிதாபிமான நிலைமையைக் கண்காணிக்கும் ஐநாவின் சிறப்புப் பார்வையாளரும் அடங்குவார்.
“பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது என்பது பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கான அவர்களின் போராட்டத்திற்கும் வழங்கக்கூடிய முக்கிய அங்கீகாரமாகும்.
“பாலஸ்தீனத்திலும் மத்திய கிழக்கு முழுவதும் அமைதியை ஏற்படுத்த எந்த ஒரு நிபந்தனையும் இன்றி பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும்.
“காஸாவில் உடனடி போர்நிறுத்த அறிவிப்பு செய்வதுடன் ராஃபாவில் மேற்கொண்டு எந்தவொரு ராணுவ நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று வலியுறுத்த அந்த அங்கீகாரம் அவசியம்,” என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

