ஜகார்த்தா: இந்தோனீசியாவில் தலைமைத்துவ மாற்றம் ஏற்படவிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் திரு பிரபோவோ சுபியாந்தோ வெற்றி பெற்றார். இந்தோனீசியாவின் அடுத்த அதிபராக அவர் பதவி ஏற்க இருக்கிறார்.
இந்தோனீசியாவின் புதிய தலைநகரமாக கிழக்கு கலிமந்தானில் உள்ள நுசாந்தாரா திகழும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தலைமைத்துவம் மாறினாலும் புதிய தலைநகரத்துக்கான பணிகள் திட்டமிட்டபடி நடந்துகொண்டிருப்பதாக இந்தோனீசியாவின் தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ உறுதி அளித்துள்ளார். இதற்காகவே அவர் கிழக்கு கலிமந்தானுக்குப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துப் பேசினார்.
ஜூன் 4ஆம் தேதியன்று பலிக்பாப்பான் நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அதிபர் விடோடோ, நுசந்தாரா நகரம் உலகிலேயே பசுமைமிக்க தலைநகரமாக விளங்கும் என்று வலியுறுத்தினார்.
நுசாந்தாரா நகரில் கட்டடங்கள் அதிகம் கட்டப்பட்டாலும் பசுமை அம்சங்கள் நிறைந்த பல இடங்களும் இருக்கும் என்று அவர் கூறினார்.
நுசாந்தாரா நகரம் அனைவரின் கனவு நகரமாக, அறிவார்ந்த நகரமாக, புத்தாக்கமிக்க நகரமாக, அனைவரும் வாழக்கூடிய நகரமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
புதிய தலைநகரத்தை உருவாக்கும் திட்டத்துக்குத் தலைமை வகித்தவரும் துணைத் தலைவரும் பதவி விலகியதாக ஜூன் 3ஆம் தேதியன்று செய்தி வெளியானது.
நுசாந்தாராவை மேம்படுத்தும் பணிகள் தடைப்படாது என்று அதே நாளன்று அதிபர் விடோடோ இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.

