இஸ்ரேலின் வட பகுதியில் கடும் நடவடிக்கைக்கு தயார்: நெட்டன்யாகு

2 mins read
ee656e34-f960-44d1-a072-e8d149d777f4
இஸ்ரேல், லெபனான் எல்லைப் பகுதியில் இஸ்ரேலியப் படையினருக்கும் ஹிஸ்புல்லா படையினருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை (ஜூன் 4ஆம் தேதி) அன்று சண்டை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக இஸ்ரேலிய எல்லைக்கு அருகே சாலையோரத்தில் தீப்பற்றி எரியும் காட்சி. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: இஸ்ரேலிய பிரதமர் பென்சமின் நெட்டன்யாகு புதன்கிழமை (ஜூன் 5ஆம் தேதி) அன்று நாட்டில் லெபனானுடனான வட எல்லைப் பகுதியை பார்வையிட்டார்.

அப்பொழுது பேசிய அவர், இஸ்ரேல் வட எல்லையில் கடும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

இஸ்ரேல் எல்லையில் உள்ள பல நகரங்களில் மக்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். அதற்குக் காரணம் அவற்றின்மீது லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா போராளிக் குழு அடிக்கடி ராக்கெட், ஆளில்லா வானூர்தித் தாக்குதல் தொடுத்த வண்ணம் உள்ளது. அந்த ராக்கெட் தாக்குதல்கள் இந்த வாரம் பெரிய அளவிலான தீச் சம்பவங்களை ஏற்படுத்தின. அவை காட்டுத் தீபோல் வட இஸ்ரேல் பகுதியைச் சேர்ந்த பரந்த நிலப் பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்தது.

“எங்களைத் தாக்குவோர் நாங்கள் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தால் அது அவர்கள் போடும் பெரிய தப்புக் கணக்காகும். வட எல்லையில் கடும் நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏதாவது ஒரு வழியில் நாங்கள் வட எல்லையில் பாதுகாப்பை நிலைநாட்டுவோம்,” என்று திரு நெட்டன்யாகு கூறினார்.

ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு காஸா போர் நடக்கும் அதேவேளையில் இஸ்ரேலுடன் கடந்த எட்டு மாதங்களாக சண்டையிட்டு வருகிறது. பலத்த ஆயுதங்களைக் கொண்டிருக்கும் இஸ்ரேல், ஹிஸ்புல்லா ஆகியவற்றின் இச்செயல்பாடுகள் மத்திய கிழக்குப் போர், பரந்து விரிவடையலாம் என்ற அச்சத்தை எற்படுத்தியுள்ளன.

இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் கடந்த 2006ஆம் ஆண்டு போரிட்டு, இரு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின் தற்பொழுதுதான் மிக மோசமான சண்டையில் அவை ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஹமாஸ் இயக்கத்துக்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கையை முடிவுக்குக் கெண்டு வருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் நிரந்தர சண்டைநிறுத்தத்துக்கு இணங்குவதுடன் காஸாவிலிருந்து தனது படைகளை முழுமையாக வெளியேறினால் மட்டுமே போர்நிறுத்தத்துக்கு ஹமாஸ் இணங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளும் இஸ்ரேலிய அரசின் முழுமையான ஆதரவுடன் அது தனது நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளன.

குறிப்புச் சொற்கள்