ஜெனீவா: எச்5என்2 வகை பறவைக் காய்ச்சல் காரணமாக மெக்சிகோவில் ஆடவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வகை காய்ச்சலால் மனிதர் ஒருவர் இறந்திருப்பது இதுவே முதல்முறை என்று உலகச் சுகாதார நிறுவனம் ஜூன் 5ஆம் தேதியன்று தெரிவித்தது.
காய்ச்சல் ஏற்பட்டதுடன் மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவற்றால் கடுமையாக அவதியுற்ற அந்த 59 வயது மெக்சிகோ நாட்டவர் ஏப்ரல் 24ஆம் தேதியன்று மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவர் பறவைகள் அல்லது விலங்குகளுடன் தொடர்பில் இருக்கவில்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.
மெக்சிகோ சிட்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதே நாளில் அவர் உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ ஆய்வுக்கூடத்தில் சோதனைகள் நடத்திய பிறகு, அவர் எச்5என்2 வகை பறவைக் காய்ச்சல் காரணமாக மாண்டார் என்பது மே 23ஆம் தேதியன்று உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு அந்த நோய் எவ்வாறு பரவியது என்பது குறித்து தெரியவில்லை.
இருப்பினும், மெக்சிகோவில் உள்ள சில பறவைகள் எச்5என்2 கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எச்5என்2 கிருமி வகையால் பாதிக்கப்பட்டுள்ள பறவைகளுக்கும் பாதிப்படைந்த மனிதருக்கும் இடையிலான தொடர்பைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இதுவரை மிகவும் குறைவாக இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், அந்தக் கிருமியால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் சாத்தியமும் மிகவும் குறைவு என்று அது நம்புகிறது.
எச்5என்2 பறவைக் காய்ச்சல் காரணமாக மாண்டவர் எற்கெனவே நாள்பட்ட சிறுநீரக நோய், நீரிழிவுநோய் (இரண்டாம் பிரிவு), நீண்டகால உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக மெக்சிகோவின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவருக்குக் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

