பாப்புவா நியூகினியில் மேலும் சில நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம்

1 mins read
a3e8a5ae-4b6e-448c-80ea-ae3abba2bc6b
பாப்புவா நியூகினி நிலச்சரிவுகளுக்கான மீட்புப் பணிகள் சனிக்கிழமை (ஜூன் 7) நிறைவடைந்தன. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வெலிங்டன்: பாப்புவா நியூகினி நிலச்சரிவு தொடர்பான மீட்புப் பணிகள் நிறைவுற்றபோதிலும் மேலும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இருவாரங்களுக்கு முன்னர் தொலைதூரக் கிராமம் ஒன்றில் மலைத்தொடர் இடிந்து விழுந்த பகுதியில் புதிய நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக நியூசிலாந்தின் புவியியல் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

எங்கா என்னும் மாநிலத்தில் உள்ள அந்த கிராமத்தில் மே 24ஆம் தேதி நிகழ்ந்த மிகப்பெரிய நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும், அந்நாட்டின் தேசிய அரசாங்கம் 2,000 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஏறத்தாழ 670 பேர் நிலத்திற்குள் புதையுண்டு இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் மன்றம் மதிப்பிட்டு உள்ளது.

இதுவரை 11 சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. மீட்புப் பணிகள் சனிக்கிழமை) (ஜூன் 7) நிறைவடைந்தன.

இதற்கிடையே, நியூசிலாந்து புவியியல் தொழில்நுட்பப் பொறியாளர்கள் பாப்புவா நியூகினி அரசாங்கத்துக்கு வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை அனுப்பினர்.

“அடுத்த சில நாள்களிலோ அதன் பின்னரோ மேற்கொண்டு நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகக் கருதுகிறோம்,” என்று அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.

“நிலச்சரிவு ஏறத்தாழ 14 ஹெக்டர் பரப்பளவில் நிகழும். அந்த அளவுக்கு மேலும் நிலச்சரிவுகள் ஏற்படுவதைத் தடுக்க இயலாது. சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் வரை நிலச்சரிவின் பகுதி நகரக்கூடும்,” என்று மற்றொரு பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்