தோக்கியோ: ஜப்பானின் பிறப்பு விகிதம் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக கடுமையான சரிவைக் கண்டுள்ளது. இது நாட்டுக்கு நெருக்கடியான நேரம் என்றும் இதைச் சரிப்படுத்த குழந்தை பெற்றுக்கொள்வோருக்கான ஆதரவுத் திட்டங்களை மேம்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றும் அந்நாட்டின் சுகாதார அமைச்சு ஜூன் 5ஆம் தேதி தெரிவித்தது.
கடந்த ஆண்டில் ஜப்பானின் சராசரி பிறப்பு விகிதம் 1.2 ஆக இருந்தது. இது நாட்டின் சராசரிப் பிறப்பு விகிதமான 2.1ஐ விட மிகக் குறைவு என்றும் அமைச்சு கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஜப்பானின் மக்கள் தொகை 124 மில்லியன். ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்ப பிறப்பு விகிதம் அதிகரிக்காமல் குறைந்து கொண்டே வருவது நாட்டுக்கு பெரிய நெருக்கடியான சூழலை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தை விளைவிக்கும் என்று தரவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
“பொருளியல் நிலையற்ற தன்மை, வேலையைச் சமாளிப்பதில் உள்ள சிரமங்கள், பிள்ளை வளர்ப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பிள்ளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
சரிந்து வரும் குழந்தைப் பிறப்பு விகிதத்தைச் சரிசெய்ய குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதற்கான வழி வகைகளை ஜப்பான் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
குழந்தைப் பராமரிப்புச் சேவையில் பெற்றோருக்கு உதவும் வகையில் கூடுதல் நிதி உதவி மற்றும் மேம்பட்ட பராமரிப்புச் சேவை அணுகுமுறை, குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு அதிக நாள்கள் விடுப்பு உள்ளிட்ட அனுகூலங்களை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்காக ஜூன் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகளில் பிறப்பு விகிதம் குறைந்து வரும் போக்கு நிலவி வருகிறது. அவ்வகையில் ஜப்பான், தனது அண்டை நாடான தென்கொரியாவைவிட சற்று கூடுதலான பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. உலகின் ஆகக் குறைந்த அளவு பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ள நாடு தென்கொரியா. அங்கு பிறப்பு விகிதம் 0.72. குழந்தை பிறப்பை ஊக்குவிக்க தென்கொரியா பெரிய அளவிலான நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
ஜப்பானிய சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கக் கூடிய பிறப்பு விகித வீழ்ச்சியை சரிசெய்வது என்பது இப்போதுள்ள முக்கிய பணி என்று அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா முன்னதாக வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்க ஜப்பான் எடுத்து வரும் முயற்சிகளில் ஒன்றாக தோக்கியோ டேட்டிங் செயலி ஒன்றை தயார் செய்துள்ளதாகவும் அந்தச் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

