சோல்: மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டிருப்போர் அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள தென்கொரிய நிறுவனங்கள் அதிகபட்சம் ஆறு நாள் விடுப்பு வழங்க இருக்கின்றன.
தற்போது மூன்று நாள் விடுப்பு மட்டுமே வழங்கப்படுகிறது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிசமமான வேலைச் சூழலை உருவாக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டின் பாலினச் சமத்துவக் கொள்கைகளுக்கான அடிப்படைத் திட்டங்களை மறுஆய்வு செய்ததாக தென்கொரியாவின் பாலினச் சமத்துவம், குடும்ப அமைச்சு ஜூன் 7ஆம் தேதியன்று கூறியது.
2024ஆம் ஆண்டுக்கான புதிய திட்டங்கள் குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் அது தெரிவித்தது.
புதிய திட்டங்களை தென்கொரியப் பிரதமர் ஹான் டக் சூவின் தலைமையின்கீழ் நடைபெற இருக்கும் 17வது பாலினச் சமத்துவக் குழு கூட்டத்தில் நடைமுறைப்படுத்த அது திட்டமிட்டுள்ளது.
இத்திட்டங்களின் ஒரு பகுதியாக, மலட்டுத்தன்மை சிகிச்சை பெறுவோருக்கான விடுப்பு நாள்களை அதிகரிக்க ஏற்கெனவே நடப்பில் இருக்கும் சட்டங்களை அமைச்சு மாற்றி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மலட்டுத்தன்மை சிகிச்சை பெற்றுக்கொள்ள தென்கொரியப் பெண் ஊழியர் ஒருவருக்கு விடுப்பு வழங்கப்படாததை அடுத்து, கொரியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

