கோலாலம்பூர்: தொழில்நுட்ப, தொழில்துறைக் கல்வி, பயிற்சிகளுக்காக (டிவிஇடி) மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூடுதலாக 200 மில்லியன் ரிங்கிட் (57.6 மில்லியன் வெள்ளி) தொகையை ஒதுக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.
திரு அன்வாரின் அரசாங்கம், தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த நாடாக மலேசியாவை உருவெடுக்கவைக்க எண்ணம் கொண்டுள்ளது. அந்த வகையில் தொழில்துறை திறன்களைக் கொண்டு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் அது இறங்கியுள்ளது.
மலேசியாவில் டிவிஇடி வாரத்துக்கான தொடக்க நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு இடம்பெற்றது. கூடுதல் தொகை வழங்கப்படுவதைத் தொடர்ந்து டிவிஇடி திட்டங்களுக்கு மொத்தமாக சுமார் எட்டு பில்லியன் ரிங்கிட் (2.30 பில்லியன் வெள்ளி) ஒதுக்கப்படும். டிவிஇடி, கல்வி சார்ந்த கொள்கைகளைப் பொறுத்தவரை முக்கியமாக கவனம் செலுத்தப்படவேண்டிய அம்சங்களில் ஒன்றாக திரு அன்வாரின் அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
திரு அன்வார், பிரதமராகப் பதவியேற்ற ஓராண்டில் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தொழில்துறைகளுக்கு மெருகூட்ட பல பெரிய திட்டங்களை அறிவித்தார். பகுதி மின்கடத்தித் துறையும் சம்பந்தப்பட்டத் துறைகளில் ஒன்றாகும்.

