மாஸ்கோ: ரஷ்யாவில் பதிவுசெய்யப்பட்ட கப்பல் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் வடகொரியாவுக்குப் பயணம் மேற்கொண்டதாக நம்பப்படுகிறது.
ரஷ்யாவுக்காக ஆயுதங்களைப் பெற அக்கப்பல் வடகொரியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கக்கூடும் என்று ஜப்பானின் யொமியுரி ஷிம்புன் ஊடகம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட சரக்குக் கப்பலின் பெயர் ‘லேடி ஆர்’ என்று நம்பப்படுகிறது. அது வடகொரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ரஜின் வட்டாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வரும் வாரங்களில் வடகொரியாவுக்கும் வியட்னாமுக்கும் பயணம் மேற்கொள்வார் என்று ரஷ்யாவின் வெடொமொஸ்டி ஊடகம் திங்கட்கிழமையன்று (ஜூன் 10) தெரிவித்தது. அரசதந்திரி ஒருவர் இத்தகவலை வெளியிட்டதாக அது குறிப்பிட்டது.
திரு புட்டின் பியோங்யாங் செல்வார் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும் வடகொரியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் மட்செகோரா வெடொமொஸ்டியிடம் உறுதிப்படுத்தினார்.
திரு புட்டின் இம்மாதமே வியட்னாமுக்குப் பயணம் மேற்கொள்ளக்கூடும் என்றும் அது தெரிவித்தது. அநேகமாக வடகொரியப் பயணத்துக்குப் பிறகு அவர் வியட்னாம் செல்வார் என்று டொடொஸ்டி குறிப்பிட்டது.

