போர்ட்லேண்ட்: திரு பிரண்டன் கெரட் ஓட்டிச் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்ததை அடுத்து, அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என அவரது நாய் உதவி தேடி கிட்டத்தட்ட 6.4 கிலோமீட்டர் ஓடியது.
இந்தச் சம்பவம் அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் கடந்த வாரம் நிகழ்ந்தது.
வாகனத்தின் கண்ணாடித் துண்டை வாயில் கவ்விக்கொண்டு ஓடிய அந்த நாய், 62 வயது திரு கெரட் செல்லவிருந்த முகாம் ஒன்றுக்குள் புகுந்தது. அங்கு அதற்கு முன்பு அந்த நாய் திரு கெரட்டுடன் சென்றுள்ளது.
அங்கு திரு கெரட்டிற்காக நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்த அவரது நண்பருக்கு, வாயில் கண்ணாடித் துண்டுடன் முச்சிரைக்க ஓடி வந்த நாயை பார்த்ததும் சந்தேகம் ஏற்பட்டது.
திரு கெரட்டுக்கு ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்பதை அவர் உணர்ந்தார்.
இதையடுத்து, அமெரிக்க நேரப்படி ஜூன் 2ஆம் தேதி இரவு திரு பிரண்டன் கெரட்டின் குடும்பத்தாரும் நண்பர்களும் மீட்புப் பணியாளர்களும் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
திரு கெரட்டின் வாகனம் பள்ளத்தாக்கில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
திரு கெரட் அதில் உயிருடன் இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
மீட்கப்பட்ட திரு கெரட், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரது கணுக்கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதுடன் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த திரு கெரட் முழுமையாக குணமடைய சில மாதங்கள் எடுக்கும் என்று நம்பப்படுகிறது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திரு கெரட்டுடன் பயணம் செய்த மற்ற மூன்று நாய்களும் காயமடைந்தன. அவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.