பெயர் சொல்லி அழைக்கும் யானைகள்

1 mins read
bf3b05a4-967c-4c1f-8c02-660ab90281bd
கென்யாவின் அம்போஸ்லி தேசியப் பூங்காவில் நடை பயிலும் யானைகள். - படம்: ராய்ட்டர்ஸ்

டால்ஃபின், கிளி போன்றவை சில நேரங்களில் குறும்புத்தனமாக சக டால்ஃபின் அல்லது கிளி எழுப்பும் ஒலியைக் கேட்டு அதேபோல் ஒலியெழுப்புவதுண்டு.

ஆனால் யானைகள் ஒன்றுக்கொன்று பெயர் சொல்லி அழைத்துக் கொள்ளும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

டால்ஃபினைப் போலவோ கிளியைப் போன்றோ வெறும் ஒலியாக இல்லாமல், குறிப்பிட்டுப் பெயர் சொல்லி அவை அழைத்துக் கொள்கின்றன என்று அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கென்யாவில் அனைத்துலக ஆய்வாளர் குழு ஒன்று ஆப்பிரிக்க யானைகளை ஆய்வு செய்தது.

அம்போஸ்லி தேசிய பூங்காவைச் சேர்ந்த இரண்டு யானை மந்தைகள் ஆய்வு செய்யப்பட்டன.

1986ஆம் ஆண்டு முதல் 2022 வரை இந்த யானைகள் எழுப்பிய சிறிய அளவிலான அழைப்பொலிகளின் பதிவுகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

யானைகள் எழுப்பும் பேரொலி பிளிறல் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இத்தகைய அழைப்பொலிகள் கிட்டத்தட்ட உறுமலைப் போன்றவை.

ஆய்வில் தனிப்பட்ட 469 அழைப்பொலிகள் அடையாளம் காணப்பட்டன. 101 யானைகள் அத்தகைய அழைப்பொலிகளை எழுப்பின. 117 யானைகள் அவ்வாறு ‘அழைக்கப்பட்டன’ என்று ஆய்வு குறிப்பிட்டது.

“மனிதர்களுக்குப் பெயரைப்போல ஒவ்வொரு யானைக்கும் குறிப்பிட்ட அழைப்பு ஒலியை அவை எழுப்புகின்றன. யானைகள் தங்களுக்கான அழைப்புக்குப் பதிலளிப்பது மட்டுமன்றி மற்ற யானைக்கான அழைப்பு ஒலிகளை அவை கண்டுகொள்வதில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்தது,” என்று ஆய்வாளர்கள் கூறினர்.

பெரும்பாலும் வயதில் பெரிய யானைகள் இளம் யானைகளை அவ்வாறு அழைப்பதாகக் கூறப்பட்டது. இளம் யானைகள் இதைப் பழக நாளாகும் என்று கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்