ஷாங்காய்: பெண் பயணியின் செல்லப் பிராணி ஒன்று தப்பி விமானி அறைக்குள் புகுந்து சலசலப்பை ஏற்படுத்தியதால் விமானம் தாமதமானது. அந்தப் பெண் பயணி தடுத்து வைக்கப்பட்டார்.
ஜூன் 10ஆம் தேதி ஷாங்காயிலிருந்து ஜினான் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் 34 வயது குவோ என்பவர் சட்டவிரோதமாக ‘சுகர் கிளைடர்’ என்று அழைக்கப்படும் செல்லப் பிராணியைக் கொண்டு சென்றார். சிறிது நேரத்தில் அந்த விலங்கு குவோவிடமிருந்து தப்பி ஓடியது. உடனே மற்ற பயணிகள் அந்த சிறிய விலங்கை மடக்கிப் பிடித்தனர்.
பொதுப் போக்குவரத்தில் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் குவோ நடந்துகொண்டதாகக் கூறி காவல்துறையினர் அவரை உடனே தடுத்து வைத்தனர்.
பாதுகாப்புச் சோதனையின்போது குவோ தனது ஆடைக்குள் விலங்கை மறைத்துவைத்து எடுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது.
இதற்கிடையே விமானப் பாதுகாப்பு நிபுணரான லின் குவான், செல்லப் பிராணிகளை விமானத்தில் எடுத்துச் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்துள்ளார்.
விலங்குகள் விமானத்தில் உள்ள மின்கம்பிகளை கடித்துவிடலாம். இதனால் விமானத்தில் அபாயகரமான கோளாறுகள் ஏற்படலாம் என்று பெய்ஜிங் நியூஸ் பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
சில சமயங்களில் விலங்குகளிடமிருந்து நோய் பரவலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

