மலேசியாவின் டெங்கித் தடுப்பூசி விலை உயர்வு

மலேசியாவின் டெங்கித் தடுப்பூசி விலை உயர்வு

2 mins read
91d9fd48-1880-4b46-8eee-4f497e817c79
மலேசியாவில் உள்ள சில மருந்தகங்களில் ‘கியூடெங்கா’ தடுப்பூசி 500 ரிங்கிட்டிற்குமேல் (S$143) விற்கப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெட்டாலிங் ஜெயா: மலேசியா டெங்கித் தொற்றுக்கு எதிராக முதல்முறை தயாரித்துள்ள ‘கியூடெங்கா’ தடுப்பூசியை அந்நாட்டிலுள்ள சில மருந்தகங்கள் மூன்று மடங்கு விலையில் விற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மருந்தகங்கள் அந்தத் தடுப்பூசியை 500 ரிங்கிட்டிற்கு (S$143) விற்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

விநியோகிப்பாளர் அந்தத் தடுப்பு மருந்தை ஒரு பெட்டி 170 ரிங்கிட் என்ற விலையில் விநியோகிப்பதாக ‘த ஸ்டார்’ நாளிதழ் தெரிவித்துள்ளது. ஒரு பெட்டியில் இரண்டு முறை செலுத்துவதற்குத் தேவையான தடுப்பு மருந்து இருக்கும்.

தொலைமருத்துவத் தளம் ஒன்றில் இரண்டு முறை செலுத்தத் தேவையான ‘கியூடெங்கா’ தடுப்பு மருந்து 550 ரிங்கிட்டிற்கு வழங்கப்படுவது தெரிவிக்கப்பட்டுள்ளது.

டகேடா மருந்துத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ‘கியூடெங்கா’ தடுப்பு மருந்து, தற்போது மலேசியாவில் உள்ள தனியார் மருந்தகங்களில் மட்டுமே கிடைக்கிறது.

இந்தத் தடுப்பு மருந்து சில விநியோகிப்பாளர்கள் மூலம் தனியார் மருந்தகங்களில் கிடைப்பதாக, மலேசியத் தனியார் துறை மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சண்முகநாதன் டி.வி. கணேசன் கூறினார்.

“இன்னும் இந்தத் தடுப்பு மருந்துக்கான தேவை அதிகமாக இல்லை. இது டெங்கிக் காய்ச்சலின் கடுமையைக் குறைக்க மட்டுமே உதவும். இது டெங்கிப் பரவலைத் தடுக்காது,” என்றார் அவர்.

கியூடெங்கா தடுப்பு மருந்தை, கட்டுப்படியான விலையில், பேரளவில் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டியது அவசியம் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதன் தற்போதைய விலை, அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் கட்டுப்படியாகக்கூடியதாக இல்லை.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தங்க நேரிடும் காலத்தைக் குறைக்கவும், நோயின் கடுமையைத் தணிக்கவும் இந்தத் தடுப்பூசி உதவும் என்பதை அவர்கள் சுட்டினர்.

மலேசியச் சந்தையில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘கியூடெங்கா’ தடுப்பூசியை மூன்று மாத இடைவெளியில் இருமுறை செலுத்திக்கொள்ள வேண்டும். நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்கு இதைச் செலுத்தலாம்.

மலேசிய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற இந்தத் தடுப்பூசி, அனைத்து வகை டெங்கிக் கிருமிக்கும் எதிராகப் பாதுகாப்பு அளிக்க வல்லது என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்