சோல்: தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையத்தில் இருவர் டென்னிஸ் விளையாடுவதைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் பரவலானது. அதைக் கண்ட இணையவாசிகள் பலர் அந்த ஜோடி சமூக ஒழுங்குமுறையின்றி நடந்துகொண்டதாகக் கூறி, அவர்களின் இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 13ஆம் தேதி இன்ஸ்டகிராமில் ‘போபேட்ரீம்’ எனும் பெயரில் இருக்கும் கணக்கின் மூலம் பகிரப்பட்ட அந்தக் காணொளியில் இன்சியான் விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகில் இருவர் டென்னிஸ் விளையாடுவது போன்ற காட்சி இடம்பெற்றது.
அந்தக் காணொளி ஜூன் 14ஆம் தேதி நிலவரப்படி, கிட்டத்தட்ட120,000 பார்வைகளைப் பெற்றுள்ளது.
பெரும்பாலான இணையவாசிகளின் கருத்து என்னவென்றால், அந்த ஜோடியின் இந்தச் செயல் அவர்களிடம் நல்ல பழக்க வழக்கமுறை இல்லை என்பதைக் காட்டுகிறது என்பதாகும்.

