ஜோகூரில் இரண்டு சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை

ஜோகூரில் இரண்டு சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை

1 mins read
4e3cdf3f-9be3-4ad3-96c8-9691c5895ce7
காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் மாண்டனர். - படம்: த ஸ்டார்

ஜோகூர் பாரு: தாமான் அபாட் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) காவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சந்தேக நபர்கள் உயிரிழந்ததைக் காவல்துறை உறுதிப்படுத்தியது.

சந்தேக நபர்களில் ஒருவர் 42 வயதுடையவர் என்றும் அவர் மீது 30க்கும் மேற்பட்ட குற்றப் பதிவுகள் இருக்கிறது என்றும் ஜோகூர் காவல்துறை ஆணையர் எம். குமார் தெரிவித்தார்.

இரண்டாவது சந்தேக நபரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

“புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைப் பிரிவு, ஜோகூர் காவல்துறை சிறப்புப் புலனாய்ப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் சந்தேகமான முறையில் சென்ற காரைப் பின்தொடர்ந்தனர். இதனை அறிந்த சந்தேக நபர்கள் தப்பியோட முயற்சி செய்தனர். பின்னர் காவலர்களை நோக்கி அவர்கள் சுட்டனர். பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதற்காக காவலர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்,” என்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

காரில் இரண்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவற்றில் ஒன்று சந்தேக நபரிடம் இருந்ததாகவும் அவர் கூறினார்.

அடையாள அட்டை அல்லது ஆவணங்கள் எதுவும் இல்லாததால் இரண்டாவது சந்தேக நபரின் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் தேடப்படும் பட்டியலில் இருந்தவர்களில் குறைந்தது இரண்டு பேர் தாமான் அபாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் என்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலில் ‘த ஸ்டார்’ தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்