பாகான் சிராய்: டீசல் எண்ணெய் மானிய திட்டம், மானியம் பெறத் தகுதியுள்ளோர் பாதிக்கப்படாமல் இருக்க உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் உள்ள குறைகளை சரிசெய்ய அரசு தயாராக இருப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
டீசல் எண்ணெய் இலக்கு சார்ந்த மானிய திட்டம் அமலாகும்போது, அது முழுமையான குறைகளில்லா திட்டமாக இருக்காது. மாறாக, அந்தத் திட்டத்தில் சில குறைகள் இருப்பது இயற்கையே என்று அவர் தெரிவித்தார்.
“ஆனால், அரசாங்கம் அதை மேம்படுத்த தயாராக உள்ளது. அந்தத் திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களில் மீனவர்கள், பள்ளிப் பேருந்து நடத்துனர்கள் போன்றோர் அடங்குவர். இவர்களுக்கு மானியம் கிடைக்கவில்லை எனில், உதவி வழங்கப்படும்,” என்று திரு அன்வார் சனிக்கிழமை (ஜூன் 15ஆம் தேதி) அன்று தொழிலியல் பூங்காவை திறக்கும் நிகழ்வு ஒன்றில் கூறினார்.
டீசல் கட்டண உயர்வு சாதாரண மக்களை பாதிக்காது என்று திரு அன்வார் விளக்கினார். மீனவர்கள், விவசாயிகள், டாக்சி ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள் போன்ற அடிக்கடி டீசல் எண்ணெய் பயன்படுத்துவோருக்கு உதவி வழங்கப்படும் என்று சொன்னார்.
இந்நிலையில், மலேசியாவில் டீசல் எண்ணெய் உயர்வு காரணமாக சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்யும் பயண முகவர்கள், மலேசியாவுக்கு சொகுசு பேருந்தில் செல்லும் வாடிக்கையாளர்கள் ஆகியோர் விரைவில் அதிக கட்டணம் செலுத்த வேண்டிவரும்.

