சோல்: தென்கொரியாவில் சுகாதார நெருக்கடி முற்றி வருகிறது.
அங்கு மருத்துவர்கள், மருத்துவப் பேராசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டு வருகின்றனர். இதனால், மருத்துவ சேவைகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க அரசு அவசர மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
சோல் தேசிய பல்கலைக்கழகத்துடன் தொடர்புள்ள நான்கு பெரிய மருத்துவமனைகளைச் சேர்ந்த 50 விழுக்காடு மருத்துவர்கள் திங்கட்கிழமையன்று (ஜூன் 17) காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இது அந்தப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர்கள் அடங்கிய குழு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தென்கொரியாவில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு எடுத்த முடிவை எதிர்த்து அந்நாட்டின் பயிற்சி மருத்துவர்கள் பிப்ரவரி மாதம் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பயிற்சி மருத்துவர்களுக்கு எதிரான நடவடிக்கையை தென்கொரிய அரசு முடுக்கி விட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பயிற்சி மருத்துவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முற்றிலும் விலக்கிக்கொள்ள வேண்டுமென்று கோரியும் மருத்துவமனைகளைச் சேர்ந்த 970 மருத்துவ பேராசிரியர்களில் 500க்கும் மேலானோர் வெளிநோயாளி சிகிச்சையைத் தவிர்ப்பது, அறுவை சிகிச்சைகளைத் தள்ளிப்போடுவது என முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், அந்த நான்கு பெரிய மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை நிலையங்களின் பயன்பாட்டு விகிதம் தற்போது இருக்கும் 62.7 விழுக்காடு என்ற நிலையிலிருந்து பாதியாகக் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாடு அமைப்பில் உள்ள மற்ற நாடுகளைப் போலல்லாமல் தென்கொரியாவில் கட்டுப்படியாகக்கூடிய மருத்துவ சேவை வழங்கப்படும் நிலை உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் தென்கொரிய மருத்துவ சேவைகளில் குறைபாடு ஏற்படுமோ என்ற கவலை எழுந்துள்ளது.