செய்திகள் மீதான மக்கள் ஆர்வம் குறைந்துவிட்டது

செய்திகள் மீதான மக்கள் ஆர்வம் குறைந்துவிட்டது

2 mins read
2b3ce604-1b24-4149-8587-28c256eaddfa
காஸாவில் நடைபெறும் போரால் சிலர் செய்திகளை புறக்கணிப்பதாக ராய்ட்டர்ஸ் கல்விக் கழகம் நடத்திய ஆய்வு தெரிய வருகிறது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

அதிகமான மக்கள் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதில்லை என்று உலகளாவிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

செய்திகள் மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும் சலிப்பைத் தருவதாகவும் ஆய்வில் பலர் கூறியுள்ளனர்.

உலகம் முழுவதும் ஏறக்குறைய பத்தில் நான்கு பேர் (39%) சில சமயங்களில் அல்லது எப்போதும் செய்திகளிலிருந்து விலகிச் செல்கின்றனர். இது, 2017ஆம் ஆண்டில் 29 விழுக்காடாக இருந்தது என்று ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக் கழக ராய்ட்டர்ஸ் கல்விக் கழகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

உக்ரேனிலும் மத்திய கிழக்கிலும் நடைபெறும் போர்கள், மக்கள் செய்திகளைப் புறக்கணிப்பதற்கு முக்கிய பங்காற்றியிருக்கலாம் என்று ஆய்வின் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

செய்திகளைத் தவிர்ப்பது தற்போது சாதனை அளவுக்கு உயர்ந்துள்ளது.

இவ்வாண்டின் டிஜிட்டல் நியூஸ் அறிக்கைக்காக ஜனவரி முதல் பிப்ரவரி வரை 47 நாடுகளில் மொத்தம் 94,943 பேரிடம் ‘யூகவ்’ ஆய்வு நடத்தியது.

உலகம் முழுவதிலும் தேசிய அளவிலும் வட்டார அளவிலும் தேர்தல்கள் நடைபெற்று வரும் வேளையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தேர்தல்கள், சில நாடுகளில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இவற்றில் அமெரிக்காவும் ஒன்று. இருந்தாலும் ஒட்டுமொத்த ஆர்வம் குறைந்துள்ளதை ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.

உலகம் முழுவதும் 46 விழுக்காட்டினர் செய்திகளில் மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது, 2017ஆம் ஆண்டில் இருந்த 63 விழுக்காட்டைவிடக் குறைவு.

பிரிட்டனில் செய்திகள் மீதான ஆர்வம், 2015ஆம் ஆண்டிலிருந்து பாதியாகக் குறைந்துவிட்டது.

“தொற்றுநோயையும் போர்களையும் மக்கள் பார்த்துள்ளனர். எனவே தங்களுடைய மனநலத்தைப் பாதுகாக்கவோ அல்லது வாழ்நாள் முழுவதும் செய்திகளிலிருந்து விலகிச் செல்வதோ மக்களிடம் இயல்பாக ஏற்பட்டுள்ள ஒன்று,” என்று ஆய்வின் முதன்மை ஆசிரியர் நிக் நியுமேன் பிபிசியிடம் தெரிவித்தார்.

திரு நியுமேன், செய்திகளைத் தேர்ந்தெடுத்துத் தவிர்க்க விரும்புபவர்களும் அடிக்கடி அவ்வாறு செய்கிறார்கள், ஏனெனில் அவர்கள் “வலிமையற்றவர்களாக” உணர்கிறார்கள் என்று கூறினார்.

சிலர் தங்களை சுற்றி வரும் செய்திகளால் குழப்பமடைகிறார்கள். மற்றவர்கள் அரசியல் செய்திகளால் சோர்வடைகிறார்கள். உலகம் முழுவதும் இருந்து வரும் அதிக அளவு செய்திகளால் பெண்களும் இளையர்களும் சோர்வடைகிறார்கள் என்று ஆய்வு யோசனை கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்