தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடகொரியாவுடன் இணைந்து வர்த்தகம்: ரஷ்ய அதிபர் புட்டின் உறுதி

2 mins read
ad5fed05-d9a8-4e16-9d13-ac19a1065e44
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் (இடது), ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

சோல்: மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் இல்லாத வகையில் வடகொரியாவுடன் இணைந்து வர்த்தகம் புரியவும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபடவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உறுதிபூண்டுள்ளார்.

மேலும், வடகொரியாவுக்கு ரஷ்யா திடமான ஆதரவை வழங்கும் என்றும் வடகொரிய அரசாங்க ஊடகம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) வெளியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திரு புட்டின் அந்த நாட்டுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டு இருக்கும் வேளையில், வடகொரிய ஆளும் உழைப்பாளர் கட்சியின் அதிகாரபூர்வ ‘ரோடோங் சின்முன்’ செய்தித்தாளில் அக்கடிதம் வெளியாகி உள்ளது.

சமத்துவம், இருதரப்பு மரியாதை மற்றும் நன்னம்பிக்கையின் அடிப்படையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இருநாடுகளும் நல்லுறவையும் பங்களாத்துவத்தையும் வளர்த்து வருவதாக திரு புட்டின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

“வர்த்தகம், இருதரப்பு குடியேற்றங்கள் போன்ற மேற்கத்திய நாடுகளால் கட்டுப்படுத்தப்படாத அம்சங்களில் மாற்று வழிகளை உருவாக்குவோம். ஒருதலைப்பட்சமான சட்டவிரோதக் கட்டுப்பாடுகளை ஒன்றிணைந்து எதிர்ப்போம்.

“அதேநேரம், யூரேசியாவில் சமமான மற்றும் பிரிக்க முடியாத பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவோம்,” என்று ரஷ்ய அதிபர் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், உக்ரேனில் ரஷ்யா மேற்கொண்டு வரும் சிறப்பு ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக வடகொரியாவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

‘அமெரிக்காவின் அழுத்தம், ராணுவ அச்சுறுத்தல்’களுக்கு இடையே தன்னைத் தானே தற்காத்துக்கொள்ள பியோங்யாங் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ரஷ்யாவின் ஆதரவு உண்டு என்றும் திரு புட்டின் தெரிவித்துள்ளார்.

திரு புட்டின் 24 ஆண்டுகளில் முதல்முறையாக வடகொரியாவுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) வருகை புரிவதாக இரு நாடுகளும் அறிவித்ததற்கு மறுநாள் அவரது கடிதம் செய்தித்தாளில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர் இரு நாள்கள் அங்கு இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்