குறைந்த குழந்தை பிறப்பு விகிதம்: எதிர்த்து முழு வீச்சில் இறங்கும் தென்கொரியா

2 mins read
595689c0-a71e-4fce-85be-699da46a2365
தென்கொரியாவின் இவ்வாண்டு கருத்தரிப்பு விகிதம் 0.68 என ஆகக் கீழ் நிலைக்குச் சென்றுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சோல்: தென்கொரியாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் குறித்து கவலை அடைந்துள்ள அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல் மக்கள்தொகையில் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதனால், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு ரொக்கப் பணம் தந்து ஆதரவு அளிக்க தென்கொரியா முடிவு செய்துள்ளது.

“ஆகக் குறைந்த பிறப்பு விகிதத்தால் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை நெருக்கடி நிலைதான் தற்பொழுது மிக முக்கியமான பிரச்சினையாக தென்கொரியாவில் உருவாகியுள்ளது,” என்று திரு யூன் சுக் யோல் கூறினார்.

மக்கள்தொகை மிக வேகமாக குறைந்து வரும் இந்த நிலையால், தென்கொரியா உயிர்ப்பித்து இருக்குமா என்ற கவலை ஏற்பட்டுள்ளதாக அதிபர் யூன் தெரிவித்தார்.

மக்கள்தொகை குறித்த இந்த அறிவிப்பை தென்கொரிய அதிபர் யூன், தான் தலைமை ஏற்றிருக்கும் நாட்டின் மூப்படையும் சமுதாயம், மக்கள்தொகை கொள்கை குழுக் கூட்டத்தில் புதன்கிழமை (ஜூன் 19ஆம் தேதி) அன்று வெளியிட்டார்.

அந்தக் கூட்டத்தில் தென்கொரிய நிதி மற்றும் மக்கள் நலன் அமைச்சின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மக்கள்தெகை தொடர்பாக 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிபர் யூன் தமது தலைமையில் கூட்டிய முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் பலன் தராத நிலையில் தற்பொழுது அரசாங்கம் இதன் தொடர்பில் முழு மதிப்பீடு செய்துள்ளதாக விளக்கினார்.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் தென்கொரியாவின் கருத்தரிப்பு விகிதம் ஆகக் குறைந்த விகிதமாக 0.76 என இருந்தது. இந்த விகிதம் இவ்வாண்டு மேலும் குறைவாக 0.68 எனக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பிரச்சினையின் அவசர நிலையை உணர்ந்த அதிபர் யூன் தமது அரசாங்கம் முழு அளவிலான பதில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்