கோத்தா கினபாலு: ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 3,500 ரிங்கிட் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு வியாழக்கிழமை அன்று (ஜூன் 20) 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ரோனி சைமே சாகா என்ற 44 வயது அதிகாரிக்கு 18,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டில் லஹாட் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் ரோனி 3,500 ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. சாலை விபத்து ஒன்றை தீர்த்து வைப்பதற்காக அவர் லஞ்சம் வாங்கியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டின்பேரில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதியன்று முதல் முறையாக அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். கடந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி வழக்கு விசாரணை தொடங்கியது. இந்த விசாரணையில் 20 அரசுத் தரப்பு, மூன்று தற்காப்புத் தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.
நீதிமன்றத்தில் பேசிய மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் வழக்கறிஞர் ஸுல்கர்னைன் ரவ்சான் ஹஸ்பி, “ஊழல் என்பது ஒரு கடுமையான குற்றமாகும், குறிப்பாக காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தால், அது மற்ற பொதுச் சேவை ஊழியர்களின் நற்பெயரைக் கெடுக்கும்,” என்றார்.
தனது கட்சிக்காரர் நிதி நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும் மனைவி, குழந்தைகளைக் கவனிக்க வேண்டியிருப்பதாகவும் கூறிய தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர், குறைவான தண்டனை விதிக்கப்படும்படி கேட்டுக் கொண்டார்.
சிறைத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீதிபதி ஒப்புக் கொண்டார்.
ஆனால் 14 நாள்களுக்குள் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

