ஓட்டுநர் பயிற்சி நிலையங்களுக்குமலேசிய அமைச்சர் எச்சரிக்கை

ஓட்டுநர் பயிற்சி நிலையங்களுக்குமலேசிய அமைச்சர் எச்சரிக்கை

1 mins read
0e9aac95-c594-4fdb-95bb-a3ccb1523621
ஊழலை ஒழிக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறியுள்ளார். - கோப்புப் படம்: பெர்னாமா

சிரம்பான்: சட்டவிரோதமாக ஓட்டுநர் உரிமங்களைப் பெற்றுத் தரும் ‘கோப்பி ஓ’ கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று மலேசிய ஓட்டுநர் பயிற்சி நிலையங்களை அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் எச்சரித்துள்ளார்.

அப்படி மீறி செயல்பட்டால் பயிற்சி நிலையங்களை நடத்துவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்றார் அவர்.

ஓட்டுநர் தேர்வின்போது ஊழல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு குறிப்பாக இளையர்களுக்கு ஆபத்தாக முடியும்.

“ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் ஊழல்களில் ஈடுபடக் கூடாது. இது, தடுக்கப்படவில்லை என்றால் இளையர்கள் இதற்கு பலியாவார்கள். உயிர்களைக் காப்பாற்றுவதே நமது இலக்கு.

“பொதுமக்களும் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் சட்டவிரோத உரிமம் வழங்கப்படும் வாய்ப்புகளை நம்பி ஏமாறக் கூடாது,” என்று ஆர்டிஎஸ் ஓட்டுநர் பயிற்சி கழகத்தின் 10வது ஆண்டு விழாவில் பேசிய அமைச்சர் வலியுறுத்தினார்.

2030ஆம் ஆண்டில் கட்டாயமாக அமலாகும் புதிய நடைமுறைகளுக்கு ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் தயாராக வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மின்சோதனை முறை நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் என்பதால் அமைச்சு அதனை அமல்படுத்துவதில் கடப்பாடு கொண்டுள்ளது.

“நீண்டகாலமாக சட்டவிரோத ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுவதை அறிந்துவைத்துள்ளோம். இத்தகைய செயல்கள் குறைந்து வருகின்றன. இருந்தாலும் சில கும்பல்கள் தற்போதைய நடைமுறைகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன,” என்று அமைச்சர் கூறினார்.

கடந்த ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சோதனை முறையை அமல்படுத்த பல ஓட்டுநர் பயிற்சி நிலையங்களிலிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்