கெய்ரோ: புனித ஹஜ் யாத்திரையின்போது கடும் வெப்பம் தாளாமல் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள். இதனால் கோபமடைந்துள்ள எகிப்திய அரசாங்கம், இதற்கு ஏற்பாடு செய்த சுற்றுலா நிறுவனங்களை நசுக்கி வருகிறது. ஏறக்குறைய 16 சுற்றுலா நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு அரசுத் தரப்பில் வழக்குத் தொடுப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்களில் குறைந்தது 530 எகிப்தியர்கள் உயிரிழந்தனர் என்று மருத்துவ, பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இவ்விவகாரங்களை கவனிக்கும் எகிப்திய அரசாங்கத்தின் நெருக்கடிகாலக் குழு, சுற்றுலா நிறுவனங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இக்குழு எகிப்திய பிரதமர் முஸ்தஃபா மேட்பவ்லி தலைமையில் செயல்படுகிறது. நாட்பட்ட நோய் காரணமாக 31 பேர் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று குழு கூறியது.
ஹஜ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்த சுற்றுலா நிறுவனங்கள், மருத்துவ வசதி உள்ளிட்ட வசதிகளை சரிவரச் செய்யவில்லை என்று குழுவின் அறிக்கை தெரிவித்தது. தங்குமிடங்களும் சரியாக இல்லை. இதனால் அதிக வெப்பத்தால் யாத்ரீகர்கள் பாதிக்கப்பட்டனர்.
சுற்றுலா நிறுவனங்களில் சில, ‘ஹஜ்’ விசா வழங்காமல் சொந்த வருகை விசா மூலம் ஹஜ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஹஜ் விசா மூலம் வருபவர்களுக்கு மட்டுமே சவூதி அரேபிய அதிகாரிகள் மருத்துவ உதவிகளை வழங்குகின்றனர்.

