ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு: பாதிரியார், 15 காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு

ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு: பாதிரியார், 15 காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு

2 mins read
0ca5099d-20b1-4851-9822-5e5c6213b19b
மக்கச்கலா நகரில் ரஷ்ய அதிகாரிகளுக்கும் துப்பாக்கிக்காரர்களுக்கும் இடையே மிகக் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: ரஷ்யாவின் வடகோகசஸ் பகுதியான டஜிஸ்தானில் யூத வழிபாட்டுத் தலம், தேவாலயம், காவல் நிலையம் ஆகிய இடங்களில் துப்பாக்கிக்காரர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாதிரியார் ஒருவரும் குறைந்தது 15 காவல்துறை அதிகாரிகளும் மாண்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாண்டோரில் பொதுமக்களில் பலரும் அடங்குவர் என்று அதிகாரிகள் கூறினர்.

டஜிஸ்தான் பகுதியில் உள்ள மக்கச்கலா, டெர்பென்ட் ஆகிய இரண்டு நகரங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் ஜூன் 23ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

“இது டஜிஸ்தானுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ரஷ்யாவுக்கே சோகம் நிறைந்த நாளாகும்,” என்று டெலிகாரம் செயலி மூலம் டஜிஸ்தானின் ஆளுநரான திரு செர்கே மெலிக்கோவ் ஜூன் 24ஆம் தேதியன்று பதிவிட்டார்.

இந்தத் தாக்குதல்களுக்கு யாரும் இன்னும் பொறுப்பேற்கவில்லை.

ஆனால், தாக்குதல்காரர்களில் மத்திய டஜிஸ்தானின் செர்கோகலா மாவட்டத்தின் தலைவரின் இரு மகன்களும் அடங்குவர் என்றும் அவர்கள் இருவரையும் விசாரணை அதிகாரிகள் தடுத்து வைத்திருப்பதாகவும் ரஷ்ய ஊடகம் தெரிவித்தது.

தாக்குதல்காரர்களில் ஆறு பேரை அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதலில் மொத்தம் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்ற தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உறுதி செய்ய முடியவில்லை.

ஜூன் 24லிருந்து 26ஆம் தேதி வரை டஜிஸ்தானில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று திரு மெலிக்கோவ் தெரிவித்தார்.

கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

மக்கச்கலா நகரில் துப்பாக்கிக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மிகக் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்ததாக ரஷ்ய ஊடகம் தெரிவித்தது.

மக்கச்கலா, கேஸ்பியன் கடலோரப் பகுதியில் உள்ள துறைமுக நகரம். அந்நகரில் 600,000 பேர் உள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலை அடுத்து அந்நகரிலிருந்து யாரும் வெளியேற முடியாதபடி அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளதாக ரஷ்ய உள்துறை அமைச்சு தெரிவித்தது.

தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்யக்கூடும் என்று ரஷ்ய அதிகாரிகள் நம்புகின்றனர்.

மக்கச்கலா நகருக்குத் தென்பகுதியில், கிட்டத்தட்ட 125 கிலோமீட்டர் தூரத்தில் யூத வழிபாட்டுத் தலம், தேவாலயம் ஆகியவை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இரு வழிபாட்டுத் தலங்கள் தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் கூறினர். அங்கு தாக்குதல் நடத்திய இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்