தென்கொரிய மின்கலன் ஆலையில் தீ: பலர் மரணம்

தென்கொரிய மின்கலன் ஆலையில் தீ: பலர் மரணம்

2 mins read
e5549ade-3854-4b01-8418-df240b0d84de
ஹுவாசியோங் நகரில் உள்ள லித்தியம் மின்கலன் ஆலையில் மூண்ட தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பு அதிகாரி. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

ஹுவாசியோங்: தென்கொரியாவில் உள்ள மின்கலன் ஆலை ஒன்றில் பெரிய அளவில் தீ மூண்டது.

சம்பவத்தில் குறைந்தது 22 ஊழியர்கள் மாண்டனர் என்றும் அவர்களில் பெரும்பாலோர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் உள்ளூர் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாண்டோரில் சீனாவைச் சேர்ந்த 18 பேரும் லாவோசைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என்று கிம் ஜின்-யங் எனும் தீயணைப்பாளர் தெரிவித்தார். நிறுவனம் தந்த தகவல்களைக் கொண்டு அவர் இவ்விவரங்களை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பெரும்பாலும் அணைக்கப்பட்டுவிட்ட தீ, உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (ஜூன் 24) காலை 10.30 மணியளவில் மூண்டது. தீ மூண்ட லித்தியம் மின்கலன் ஆலை, தென்கொரியாவின் மின்கலன் உற்பத்தி நிறுவனமான அரிசெல்லுக்குச் சொந்தமானது.

ஆலை, தலைநகர் சோலுக்கு தெற்கே இருக்கும் ஹுவாசியோங் நகரில் அமைந்துள்ளது.

ஹுவாசியோங் நகரில் உள்ள லித்தியம் மின்கலன் ஆலையில் தீ.
ஹுவாசியோங் நகரில் உள்ள லித்தியம் மின்கலன் ஆலையில் தீ. - படம்: ஏஎஃப்பி

ஆலையில் இருக்கும் கிடங்கு ஒன்றில் சில மின்கலன்கள் வெடித்ததால் தீ மூண்டது என்று திரு கிம் கூறினார். வெடிப்பு நிகழ்ந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மாண்டோரை அடையாளம் காண்பது சிரமமாக இருந்ததாகவும் திரு கிம் கூறியிருந்தார்.

காணாமற்போன ஐவரைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் சொன்னார். அறுவரின் உடல்கள் ஆலைக்கு வெளியே கொண்டுவரப்பட்டதாக நேரில் கண்ட ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரிசெல் நிறுவனம், உணர்க்கருவிகளுக்கும் வானொலித் தொடர்பு சாதனங்களுக்கும் லித்தியம் மின்கலன்களை உற்பத்தி செய்கிறது. அந்நிறுவனத்திடம் 48 ஊழியர்கள் இருப்பது அதன் லிங்க்ட்இன் தளத்திலும் அதிகாரபூர்வ ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து வந்த அழைப்புகளுக்கு அரிசெல் பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அரிசெல், தென்கொரியப் பங்குச் சந்தையில் இடம்பெறவில்லை. ஆனால் அதன் பெரும்பான்மைப் பங்குகள், தெனகொரியப் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள எஸ்-கனெக்ட் எனும் நிறுவனத்துக்குச் சொந்தமானவை என்று தெரியவந்துள்ளது.

ஆலையின் மேல் தளங்கள் இடிந்து விழுந்தது உள்ளிட்ட காட்சிகளைக் கொண்ட படங்களும் காணொளிகளும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.

குறிப்புச் சொற்கள்