பாரிஸ்: பிரெஞ்சு பசிபிக் பிரதேசமான நியூகலிடோனியாவில் திங்கட்கிழமை மீண்டும் கலவரம் மூண்டது.
சிறையில் அடைக்கப்பட்ட சுதந்திர ஆதரவாளரான கிறிஸ்டியன் டெய்ன் பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டதைக் கண்டித்து வன்முறை வெடித்ததாகவும் காவல்துறை வாகனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கொளுத்தியதாகவும் அதிகாரிகள் கூறினர்.
அவர்கள் சாலைகளை மறித்ததோடு வடக்குப் பகுதி கவ்மேக் சமூக வட்டாரத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தை தீ வைத்துக் கொளுத்தியதாகவும் தலைநகர் நூமியெவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் கூறியது.
தீயணைப்பு வாகனங்களும் தாக்கப்பட்டன. அந்த வாகனங்களை நோக்கி வன்முறையாளர்கள் சுட்டதாக நம்பப்படுகிறது. பள்ளிக்கூடங்கள் சிலவற்றை மூடுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தினர்.
இதற்கு முன்னர் கடந்த மே மாதம் நியூகலிடோனியாவில் வன்செயல்கள் மூண்டன. அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான பிரெஞ்சுக் குடியிருப்பாளர்கள் பத்தாண்டுகளுக்கு வாக்களிக்க வகைசெய்யும் சீர்திருத்தங்களை அங்கீகரித்து பிரான்ஸ் வாக்களித்ததைத் தொடர்ந்து அப்போது வன்முறை வெடித்தது.
உள்நாட்டில் வசிக்கும் கனக் இன மக்கள் சுதந்திரம் வேண்டி காத்திருக்கிறார்கள்.
பிரெஞ்சு குடியிருப்பாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டால் அது தங்களுக்கான சுதந்திரத்தை அங்கீகரிக்கும் வாக்கெடுப்பை நீர்த்துப்போகச் செய்துவிடும் என கலிடோனிய குடிமக்கள் கருதுகிறார்கள்.
கலிடோனியா என்பது தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் கிழக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து 1,210 கிமீ தூரத்திலும் பிரான்சில் இருந்து 20,000 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.

