சோல்: கொரியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான கேஇ189 விமானம் நடுவானில் கடுமையான ஆட்டங்கண்டது.
இச்சம்பவம் சனிக்கிழமை (ஜூன் 22) நடந்தது. விமானம் ஆட்டங்கண்டதில் 13 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
முதலில் விமானம் தென்கொரியாவின் இன்சியான் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து ஜூன் 22ஆம் தேதி பிற்பகல் 4.45 மணி வாக்கில் 125 பயணிகளுடன் தைவான் புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட 50 நிமிடங்களில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்திற்குள் இருக்கும் காற்றழுத்தத்தை சரியாக வைக்கும் கட்டமைப்பில் பாதிப்பு இருந்தது.
இதன் காரணமாக விமானம் கிட்டத்தட்ட 15 நிமிடங்களில் 26,900 அடி கீழ் இறங்கியது என்று விமானங்களை கண்காணிக்கும் ‘பிலைட்ரேடார்24’இன் தரவு கூறுகிறது.
இச்சம்பவத்தால் 15 பேருக்கு காதுகளில் வலி ஏற்பட்டது. 13 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் அந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டது. எந்த பிரச்சினையும் இல்லாமல் அது தைவானில் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் விமானத்தை சோதித்தபிறகு அதை பராமரிப்பு செய்யவுள்ளதாகவும் கொரியன் ஏர்லைன்ஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இச்சம்பவத்தால் மிகவும் பதற்றமடைந்ததாகவும் பயந்துவிட்டதாகவும் பயணிகள் தைவான் சென்ற பின்னர் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.