கெய்ரோ: காஸாவில் உள்ள மருந்தகத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட ஆகாயத் தாக்குதலில் காஸாவின் ஆம்புலன்ஸ், அவசர சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் கொல்லப்பட்டதாக காஸா வட்டார சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஆனால், இந்தத் தாக்குதலில் ஹமாஸின் மூத்த ஆயுதப் படைகளின் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
“இஸ்ரேலின் தாக்குதலில் ஹனி அல்-ஜாஃபராவி என்ற அந்த இயக்குநர் கொல்லப்பட்டார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதியிலிருந்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இவருடன் சேர்த்து 500 மருத்துவ ஊழியர்கள் கொல்லப்பட்டனர்,” என்று சுகாதார அமைச்சு கூறியது. மேலும் 300 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது.
ஹமாசுக்குத் தேவையான ஆயுதங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் முஹமட் சாலேயைக் குறிவைத்தே தாக்கியதாக தனது அறிக்கையில் இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
“ஹமாஸ் அமைப்புக்கு உத்திபூர்வ ஆயுதங்களுக்கு ஏற்பாடு செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக சாலே இருந்தார். மேலும் ஆயுதங்களை உருவாக்கும் குழுக்களுக்கு அவர் கட்டளைகளைப் பிறப்பிக்கும் தளபதியாக இருந்தார்,” என்றது இஸ்ரேலிய ராணுவம்.
எட்டு மாதங்களாக இஸ்ரேலும் ஹமாசும் சண்டையிட்டு வருகின்றன. சண்டையை நிறுத்துவதற்காக அமெரிக்காவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் பேச்சுவார்த்தையும் தோல்விகளையே தழுவி வருகிறது.
போர் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்துகிறது. ஆனால் ஹமாசை ஒழிக்கும் வரை தற்காலிகமாக மட்டும் போரை நிறுத்த முடியும் என்று இஸ்ரேல் தரப்பில் சொல்லப்படுகிறது.
எகிப்துக்கு அருகே உள்ள ராஃபாவின் கிழக்கு, தெற்கு, மத்திய பகுதிகளை இஸ்ரேலியப் படைகள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. மேற்கு, வடக்குப் பகுதிகளையும் நோக்கி அவை முன்னேறி வருவதால் கடுமையான சண்டை நடைபெற்று வருவதாக அவ்வட்டார குடியிருப்பாளர்கள் கூறியுள்ளனர்.

