நெட்டன்யாகு: இனி காஸா அல்ல, ஹிஸ்புல்லா

நெட்டன்யாகு: இனி காஸா அல்ல, ஹிஸ்புல்லா

2 mins read
7378e5dd-afc7-4852-a3c2-1172d5513334
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு. - படம்: ஏஎஃப்பி

ஜெருசலம்: காஸாவில் தீவிரச் சண்டையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவோம். அதன் பிறகு எங்களுடைய இலக்கு ஹிஸ்புல்லாவாக இருக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியுள்ளார்.

தெற்கு இஸ்ரேலில் லெபனானைத் தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லாவுடனான வன்முறை அதிகரித்து வருகிறது. இதனால் இது, மற்றொரு அனைத்துலகப் பிரச்சினையாக உருவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் அப்பகுதிக்கு சில படைகளை அனுப்பிவைக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது.

“இனி காஸாவில் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் குறிப்பிட்ட துல்லியமான தாக்குதல்களை மட்டுமே நடத்தும்,” என்று இஸ்ரேலின் ஒளிவழி 14க்கு அளித்த பேட்டியில் திரு நெட்டன்யாகு தெரிவித்தார்.

ஒரு மாத காலத்தில் ராஃபா நகரில் நடைபெறும் போர் முடிவுக்கு வருமா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

“வெகுவிரைவில் முடிவுக்கு வரும்,” என்று அக்டோபர் 7ஆம் தேதி போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக அளித்த பேட்டியில் திரு நெட்டன்யாகு தெரிவித்தார்.

அதே அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அதிரடித் தாக்குதல்களை நடத்தியதால் போர் வெடித்தது.

அதில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்டோர் பிணைப் பிடித்துச் செல்லப்பட்டனர். தற்போது எட்டு மாதங்களாக இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.

தெற்கு இஸ்ரேல் பகுதிக்கு சில படைகளை அனுப்பி வைப்பதுதான் இஸ்ரேலிய ராணுவத்தின் அடுத்த வேலை என்று பிரதமர் நெட்டன்யாகு குறிப்பிட்டார்.

அங்கு ஹிஸ்புல்லாவுடன் எல்லைத்தாண்டிய மோதல் அதிகரித்து வருகிறது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட உள்ளூர் மக்களை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு வருவது மற்றொரு நடவடிக்கையாகும்.

“எங்களால் முடிந்தால் அரசதந்திர வழியில் இதற்குத் தீர்வு காண்போம். அப்படியில்லையென்றால் மற்றொரு வழியில் அதனை நிறைவேற்றுவோம்,” என்று நெட்டன்யாகு மேலும் தெரிவித்தார்.

ஆனால் இஸ்ரேலுக்கும் ஹிஹ்புல்லாவுக்கும் இடையே மற்றொரு போர் ஏற்படும் என்று அமெரிக்க அதிகாரிகளின் கவலையாக உள்ளது. ஈரானின் வலுவான ஆதரவுடன் ஏராளமான கனரக ஆயுதங்களுடன் லெபனானில் ஹிஸ்புல்லா செயல்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்