நியூயார்க்: கடந்த 2023ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் வெப்பமும், எப்போதும் இல்லாத வகையில் அதிகமான காட்டுத் தீச்சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் அடிக்கடி காடுகளில் தீ பற்றி எரியும் சம்பவங்களும், கட்டுக்கடங்கா தீவிரமான காட்டுத் தீச்சம்பவங்களும் இரட்டிப்பாகியுள்ளதாக ஆய்வு கண்டறிந்துள்ளது.
உலகம் முழுதும் கடந்த ஏழு ஆண்டுகளில் நிகழ்ந்த காட்டுத் தீச்சம்பவங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், அவற்றில் ஆறு ஆண்டுகளில் மிகவும் மோசமான காட்டுத் தீச்சம்பவங்கள் நிகழ்ந்தன என்றும் அவற்றால் சுற்றுச்சூழலும் பொருளியலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
“பருவநிலை மாற்றத்தால் இவ்வளவு குறுகிய காலக்கட்டத்திற்குள் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவது அதிர்ச்சிதரக் கூடியதாக உள்ளது என்கிறார் டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆய்வாளரும் அந்த ஆய்வுக் கட்டுரையின் முதன்மை ஆசிரியருமான முனைவர் கேலம் கன்னிங்ஹாம்.
வெப்பமயம், காட்டுத் தீ பற்றிய அந்த ஆய்வின் முடிவு ‘ஜர்னல் நேச்சர் எக்காலஜி அண்ட் எவலுஷன்’ என்ற இதழில், கடந்த ஜூன் 24ஆம் தேதி வெளியாகியுள்ளது. வெப்ப அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள வறட்சியான பருவநிலை வெளிப்பாடுகளை உலகில் பரவலாக ஏற்படும் காட்டுத் தீச் சம்பவங்களால் நாம் உணரமுடிகிறது,” என்றார் முனைவர் கன்னிங்ஹாம்.
அண்மையில், நியூ மெக்சிகோவில் ஏற்பட்ட மோசமான காட்டுத்தீ சம்பவத்தில் கிட்டத்தட்ட 10,000 ஹெக்டர் காட்டுவளப்பகுதி பற்றி எரிந்து சாம்பலானது. அந்தச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.
தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 5,600 ஹெக்டர் பரப்புள்ள காடுகள் தீக்கிரையாயின.
துருக்கியில் கடந்த ஜூன் 20ஆம் தேதி நிகழ்ந்த காட்டுத்தீ சம்பவத்தில் ஏராளமான விளைநிலங்கள் கருகின. குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
காட்டுத்தீ சம்பவங்கள் பொருளியல் ரீதியாக பேரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு, பொருளியல் மந்தநிலை ஆகியவற்றை ஈடுகட்டுவதற்கு ஆண்டுக்கு 893 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக முனைவர் கன்னிங்ஹாம் தெரிவித்துள்ளார்.
காடுகளில் பற்றி எரியும் தீயால் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 2003 ஜனவரி முதல் 2023 நவம்பர் வரையிலான துணைக்கோளங்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்தனர்.
உலகம் முழுதும் நிகழ்ந்த 30 மில்லியன் காட்டுத்தீ சம்பவங்களில் 2,913 மிகவும் மோசமான தீவிரக் காட்டுத்தீ சம்பவங்கள் என்றும் அந்த ஆய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளது. மோசமான காட்டுத்தீ நிகழ்வுகளால் வெளியான பரந்த அளவிலான புகை மண்டலங்கள், புவி வெப்பமடைதலை மேலும் தீவிரப்படுத்தக்கூடும். அதனால் சுற்றுச்சூழல், பொருளியல் பேரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக முனைவர் கன்னிங்ஹம் கூறினார்.