ஜோகூர் பாரு: ஜோகூரில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தவரின் மோட்டார் சைக்கிள் எருமை மாட்டின் மீது மோதியதைத் தொடர்ந்து அந்த 53 வயது மலேசிய ஆடவர் உயிரிழந்தார்.
அந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) அதிகாலை 3.40 மணியளவில் ஜாலான் சுங்கை திராமில் நிகழ்ந்ததாக ஸ்ரீஅலாம் காவல்நிலைய அதிகாரி முகம்மது சொஹைமி இஷாக் கூறினார்.
“தெப்ராவ் என்னும் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தபோது அந்த வழித்தடத்தில் எருமை மாடு ஒன்று சென்றுகொண்டு இருந்தது.
“எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் அந்த எருமைமீது மோதியது. அச்சம்பவத்தில் கடுமையாகக் காயமுற்ற ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,” என்று புதன்கிழமை அந்த அதிகாரி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக அந்த ஆடவரின் உடல் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கார் ஒன்றில் இருந்த கேமராவில் அந்தச் சம்பவம் பதிவானது. அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
இருள் சூழ்ந்த சாலையில் எருமையுடன் மோட்டார் சைக்கிள் மோதியதும் அதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் உடைந்து சிதறியதும் அந்தக் காணொளியில் பதிவாகி இருந்ததாக ‘த ஸ்டார்’ இணையச் செய்தி குறிப்பிட்டது.