கோலாலம்பூர்: ஜோகூரில் இருக்கும் குளுவாங் பகுதியில் இரவு நேர வான் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எம்81-11 ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மலேசிய ராணுவ அதிகாரிகள் மூவர் காயமடைந்தனர்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 28) அதிகாலை 1.35 மணியளவில் குளுவாங்கில் உள்ள மக்கோத்தா ராணுவ முகாமில் ராணுவ விமான அதிகாரி பயிற்சியின்போது நடந்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.
முகாமின் விமான ஓடுபாதையில் ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட போது இந்த விபத்து நடந்ததாகவும் இதில் ஹெலிகாப்டர் பயிற்றுவிப்பாளர், பயிற்சி மேற்கொண்ட அதிகாரி உட்பட மூவர் காயமடைந்ததாகவும் அது கூறியது.
அனைத்து பணியாளர்களும் சுயநினைவுடன் உள்ளனர் என்றும் ஆனால் அவர்களுக்கு முதுகெலும்பு முறிவு உட்படப் பல்வேறு காயங்கள் ஏற்பட்டன என்றும் மலேசிய ராணுவம் ஜூன் 28ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மேலும், அவர்கள் மூவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் அனைவரும் குளுவாங்கில் உள்ள என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மலேசிய ராணுவம் கூறியது.

