தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடகொரியா: ‘ஆசிய நேட்டோ’வை உருவாக்கும் தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான்

2 mins read
bb883e63-acbd-46da-935c-7b4092cf76ee
கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்கும் வடகொரியா. - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் ஈடுபட்டுள்ள ‘ஃபிரீடம் எட்ஜ்’ ராணுவப் பயிற்சிகளை வடகொரியா சாடியிருக்கிறது.

‘ஃபிரீடம் எட்ஜ்’ ராணுவப் பயிற்சிகள், அந்த மூன்று நாடுகளுக்கிடையிலான உறவு ஆசிய கண்டத்துக்கான நேட்டோ கூட்டணியைப் போல் உருவெடுத்திருப்பதைக் காட்டுவதாக வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 30) அவ்வாறு கூறியது.

அமெரிக்காவின் கேம்ப் டேவிட் பகுதியில் சென்ற ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் அந்தப் பயிற்சிகளுக்கான திட்டம் வரையப்பட்டது. வடகொரியாவின் ஆயுதச் சோதனைகள் காரணமாக கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை எதிர்கொள்ளும் நோக்கில் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இலக்காகும்.

அமெரிக்கா, அதன் பங்காளிகள் ஆகியவற்றின் தலைமையிலான ராணுவக் கூட்டணி வலுப்படுத்தப்படுவதை பியோங்யாங் சகித்துக்கொள்ளாது; வட்டார அளவில் அமைதியை நிலைநாட்ட அதிரடியான, நெருக்குதல் அளிக்கக்கூடிய பதிலடியை பியோங்யாங் கொடுக்கும் என்று வடகொரிய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டதாக கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

தென்கொரியாவையும் ஜப்பானையும் நேட்டோ கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வா‌ஷிங்டன் தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதாகவும் வடகொரிய வெளியுறவு அமைச்சு குற்றஞ்சாட்டியது. தென்கொரியா, உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்வது அதை எடுத்துக்காட்டுவதாக அமைச்சு சுட்டியது.

ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் அண்மையில் இருதரப்பு தற்காப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் உக்ரேனுக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்குவது குறித்துத் தாங்கள் ஆலோசிப்பதாக தென்கொரியா தெரிவித்தது.

வடகொரியா, ர‌ஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குகிறது என்றும் அந்த ஆயுதங்கள் உக்ரேன் போரில் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அமெரிக்காவும் தென்கொரியாவும் கூறுகின்றன. ர‌ஷ்யா, வடகொரியா இரண்டும் அதை மறுத்துள்ளன.

அமெரிக்காவும் தென்கொரியாவும் மேற்கொண்டுவரும் கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கு எதிராக வடகொரியா நீண்டகாலமாகக் கண்டனம் தெரிவித்து வந்துள்ளது. அத்தகைய பயிற்சிகள் தன்மீது படையெடுப்பதற்கான ஒத்திகை என்றும் அவை வா‌ஷிங்டன், சோல் ஆகியவற்றின் எதிர்ப்புணர்வைச் சித்திரிக்கின்றன என்றும் வடகொரியா சாடி வருகிறது.

குறிப்புச் சொற்கள்