நேப்பிடோ: மியன்மாரின் ராணுவ அரசாங்கத்தால், கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்குத் தேவையான நிதியையும் ஆயுதங்களையும் இன்னமும் பெறமுடியும் என்று ஐக்கிய நாட்டுச் சபையின் (ஐநா) அறிக்கை ஒன்று தெரிவித்திருந்தது.
அந்த அறிக்கையை மியன்மாரின் மத்திய வங்கி மறுத்துள்ளது. தனது கண்காணிப்பில் உள்ள நிதி நிலையங்கள் சரியான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாக மத்திய வங்கி கூறியுள்ளது.
ஐநா அறிக்கையைத் தான் கடுமையாக மறுப்பதாக சனிக்கிழமையன்று (ஜூன் 29) ராணுவ அரசாங்கத்தின் செய்தித்தாளில் வெளியான அறிக்கை ஒன்றில் மியன்மார் மத்திய வங்கி தெரிவித்தது.
“அந்த ஐநா அறிக்கை மியன்மார் மக்களின் அக்கறைகளுக்கும் மியன்மாருக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கும் பெரிய அளவில் பங்கம் விளைவிக்கிறது,” என்று மத்திய வங்கி சாடியது.
மியன்மாரின் ராணுவ அரசாங்கத்தைத் தனிமைப்படுத்த அனைத்துலக அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; அதன் காரணமாக அந்நாட்டு அரசாங்கம் ராணுவக் கருவிகளை வாங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும், கடந்த மார்ச் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில் மியன்மார் ராணுவ அரசாங்கத்துக்காக, 253 மில்லியன் டாலர் (343 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவக் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டன என்று மியன்மாரின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் அறிக்கைகளை வெளியிடும் ஐநா அதிகாரி டாம் ஆண்ட்ரூஸ் ஜூன் மாதம் 26ஆம் தேதியன்று தெரிவித்தார்.
சக தென்கிழக்காசிய நாடும் அண்டை நாடுமான தாய்லாந்து உள்ளிட்டவற்றில் இருக்கும் வங்கிகளின் உதவி மியன்மார் அரசாங்கத்துக்குக் கிடைப்பதாக திரு டாம் ஆண்ட்ரூசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

