பாரிஸ்: பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்கெடுப்பில் அந்நாட்டின் தீவிர வலதுசாரிக் கட்சியான தேசியப் பேரணி (ஆர்என்) வெற்றிபெற்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் ஆர்என் பிரான்சில் ஆட்சியை அமைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
‘ஆர்என்’உம் அதன் பங்காளிகளுக்கும் 33 விழுக்காட்டு வாக்குகள் கிடைத்தன. அதற்கு அடுத்த நிலையில் இடதுசாரிக் கூட்டணி 28 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது. அதற்கும் அடுத்த நிலையில்தான் பிரெஞ்சு அதிபர் இமேனுவெல் மெக்ரோனின் மிதவாதக் கூட்டணி வந்தது. மிதவாதக் கூட்டணி 20 விழுக்காட்டு வாக்குகளை மட்டுமே பெற்றது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சு இத்தகவல்களை வெளியிட்டது. திட்டமிடப்பட்டதற்கு முன்பே தேர்தலை நடத்த அழைப்பு விடுத்த திரு மெக்ரோனுக்கு இது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
எனினும், ‘ஆர்என்’ கட்சியால் ஆட்சி அமைக்கமுடியுமா என்பது அடுத்த வாரம் நடைபெறவுள்ள முக்கிய வாக்கெடுப்பைப் பொறுத்தே தெரியும். பிரான்ஸ் முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளில் ஆர்என் வேட்பாளரான ‘மரின் லெ பென்’ஐ எதிர்த்துப் போட்டியிட்டு சிறப்பாகச் செய்த கட்சிகளுடன் எவ்வாறு மற்ற கட்சிகள் ஒன்றுசேரக்கூடும் போன்ற அம்சங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அடுத்த சுற்றில் ‘ஆர்என்’ஐத் தோற்கடிக்கக் கூடுதல் வாய்ப்புகள் உள்ள வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை மீட்டுக்கொள்ளப்போவதாக ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 30) இடதுசாரிக் கூட்டணியான புதிய பிரபல முன்னணி (நியூ பாப்புலர் ஃபிரன்ட்), திரு மெக்ரோனின் மிதவாதக் கூட்டணி ஆகிய இரண்டும் தெரிவித்தன.
ஆர்என், குடியேறிகளை வரவேற்கும் கொள்கைகளுக்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நம்பிக்கையில்லாத வகையிலும் இயங்கும் கட்சியாகப் பார்க்கப்படுகிறது. பிரான்சில் பல காலமாக ஒதுக்கப்பட்ட கட்சியான அது இப்போது ஆட்சியை அமைக்கக்கூடிய சாத்தியம் எழுந்துள்ளது.
இனவாதம், யூதர்களுக்கு எதிரான பாகுபாடு போன்ற காரணங்களுக்காக அவதூறுக்கு உள்ளான ‘ஆர்என்’இன் பெயரை மீட்க முயற்சி செய்யப்போவதாக திருவாட்டி லெ பென் கூறியுள்ளார். திரு மெக்ரோன்மீது கோபம் கொண்டுள்ள வாக்காளர்கள் பிரான்சில் அதிகமாக இருக்கும் வாழ்க்கைச் செலவினம், குடியேற்றம் ஆகியவற்றின் தொடர்பிலும் ஆத்திரம் கொண்டுள்ளனர். அப்படி இருக்கையில் திருவாட்டி லெ பென்னின் இந்த அணுகுமுறை பலனளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.