கேன்பரா: பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜூலை 4ஆம் தேதியன்று ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூரை மீது ஏறி பதாகைகளைத் தொங்கவிட்டனர்.
அந்த பதாகைகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான, இஸ்ரேலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வாசகங்களைக் கொண்டிருந்தன.
இந்த அத்துமீறல் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கக்கூடியது என்று ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பதாகைகளைத் தொங்கவிட்டது மட்டுமின்றி, கூரை மீது நின்றுகொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி இஸ்ரேலிய அரசாங்கத்தைச் சாடினார்.
இஸ்ரேல் போர்க் குற்றங்களைப் புரிவதாக அவர் குற்றம் சாட்டினார்.
போர்க் குற்றக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்து வருகிறது.
கூரை மீது நின்றுகொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த காவல்துறையினரும் பாதுகாப்பு அதிகாரிகளும் முயன்றதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஆஸ்திரேலிய நேரப்படி காலை 11.30 மணி அளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களைக் காவல்துறை அதிகாரிகள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம் செய்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் இதுபோன்று யாரும் அத்துமீறி நுழையாமல் இருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அதற்காக அதிகம் செலவழிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட அதே நாளில் ஆஸ்திரேலியாவின் ஆளுங்கட்சி செனட்டர் ஒருவர் பதவி விலகினார்.
பாலஸ்தீனம் தொடர்பாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடு அவருக்கு அதிருப்தி அளித்ததால் அவர் பதவி விலகியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, நாடாளுமன்றக் கட்டடத்தின் கூரை மீது ஏறி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீசி கண்டனம் தெரிவித்தார்.
அது அமைதிப் போராட்டம் அல்ல என்றார் அவர்.

