கோலாலம்பூர்: மலேசியா என்ற பெயரைக் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவர் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார், அந்த அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிரவும் செய்திருக்கிறார்.
இதைக் கண்டு இணையவாசிகள் பலர் உற்சாகமடைந்தனர்.
மலேசியா என்ற பெயரைக் கொண்ட இந்த சுற்றுப்பயணி டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் இடம்பெற்றுள்ளார். தென்கிழக்காசிய நாடான மலேசியாவுக்குத் தான் முதன்முறையாகப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தனது பெயரைக் கொண்டிருப்பதால்தான் அந்நாட்டுக்குச் செல்ல முடிவெடுத்ததாகவும் இவர் அந்தக் காணொளியில் தெரிவித்துள்ளார்.
35 நொடிகள் ஓடும் அந்தக் காணொளி 48,000க்கும் அதிக முறை காணப்பட்டிருக்கிறது. பெர்கி மானா கொகோகோ எனும் தொடரில் அந்தக் காணொளி இடம்பெறுகிறது.
அத்தொடரில் சுற்றுப்பயணிகளிடம் அவர்களின் மலேசிய பயண அனுபவங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படும்.
மலேசியாவுக்குப் போகும் முன்பு அந்நாட்டைப் பற்றித் தனக்கு எதிர்பார்ப்பு ஏதும் இல்லை என்றும், ஆனால் அங்கு சென்ற பிறகு அனுபவம் அமோகமாக இருந்ததாகவும் ‘மலேசியா’ குறிப்பிட்டார்.
“இதுவரை (அனுபவம்) மிகச் சிறப்பாக இருந்துள்ளது. இங்குள்ள மக்கள் மிகவும் அன்பாக இருக்கின்றனர்,” என்றார் ‘மலேசியா’. “உணவு மிகவும் சிறப்பாக உள்ளது. நம்மை வரவேற்கும் வண்ணம் கலாசாரம் இருக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
காணொளிக்குக் கருத்துகள் பதிவிட்டோரில் ஒருவர், மலேசியா என்ற வித்தியாசமான பெயர் வைத்திருப்பதற்குப் பின்னால் உள்ள காரணத்தைக் கேட்டார். அதற்குப் பதிலளித்த காணொளியைப் பதிவேற்றம் செய்தவர், அது பலர் வைத்துக்கொள்ளும் பெயர்தான் என்று கூறினார்.

