கார் மோதி புலி மரணம்

1 mins read
e0d5eb46-0630-4ec2-8ae1-b324e8dcd87b
மாண்ட புலியின் உடல் விரைவுச்சாலையை ஒட்டிய கால்வாயில் கிடந்தது. - படம்: தி ஸ்டார்

தாப்பா: விரைவுச்சாலையைக் கடந்தபோது கார் மோதியதில் மலாயன் இனப் புலி ஒன்று மாண்டுபோனது.

இச்சம்பவம் மலேசியாவின் வடக்கு - தெற்கு விரைவுச்சாலையில் சனிக்கிழமை (ஜூலை 6) அதிகாலை 5.45 மணியளவில் நிகழ்ந்தது.

அவ்விரைவுச்சாலையை ஒட்டிச்செல்லும் கால்வாயில் அப்புலியின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

புலியின்மீது மோதிய காரின் முன்பக்கமும் சேதமடைந்தது.

பேராக் காட்டுயிர், தேசியப் பூங்காத் துறையின் இயக்குநர் யூசோஃப் ஷரிஃப், கார் மோதி புலி உயிரிழந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

“120 கிலோ எடைகொண்ட அந்த ஆண் புலிக்கு நான்கு வயதிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அப்புலியின் உடல் சுங்கையிலுள்ள தேசிய காட்டுயிர் மீட்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது,” என்று திரு ஷரிஃப் விளக்கினார்.

முன்னதாக, கடந்த மாதம் கோலா கிராயிலுள்ள ஓர் ஆற்றில் ஒரு புலியின் உடல் மிதந்ததைக் கிளந்தான் காட்டுயிர்த் துறை உறுதிப்படுத்தியது.

கடந்த மே 16ஆம் தேதி, பெந்தோங்கில் கோலாலம்பூர் - கராக் விரைவுச்சாலையை ஒட்டி ஓர் ஆண் புலி மாண்டுகிடக்கக் காணப்பட்டது. அவ்வழியே சென்ற வாகனம் மோதியதால் அப்புலி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்