புத்ராஜெயா: 1எம்டிபி நிதியை தவறாகப் பயன்படுத்தி வாங்கப்பட்ட சொத்துகளை திரும்ப ஒப்படைப்பதில் மலேசியா கவனம் செலுத்தும் என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதின் நாசுஷன் இஸ்மாயில் தெரிவித்து உள்ளார்.
ஜோ லோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் லோ தேக் ஜோ, 1எம்டிபி விவகாரத்தில் மலேசிய அரசாங்கத்தால் தேடப்படும் வர்த்தகர்.
அவருக்கும் அமெரிக்க நீதித் துறைக்கும் இடையிலான அண்மைய உடன்பாடு குறித்து உள்துறை அமைச்சு அறிந்திருப்பதாக திரு சைஃபுதின் கூறினார்.
புத்ராஜெயா சதுக்கத்தில் சனிக்கிழமை (ஜூலை 6) காவல்துறை நடத்திய சமூகப் பாதுகாப்பு ஓட்டம் தொடர்பான நிகழ்வில் பங்கேற்ற அவர், அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
“அவர்களுக்கு இடையிலான உடன்பாடு அமெரிக்க நீதித் துறை கையாண்ட விவகாரம் தொடர்பானது . மேலும், 1எம்பிடி சொத்துகளை நீதித்துறையிடம் திருப்பித் தருவது சம்பந்தமானதும்கூட அது.
“மலேசியாவின் சொத்துகள் சம்பந்தப்பட்டதாக அது இருக்குமேயானால் சொத்துகளை அதன் சொந்த நாட்டிடமே திரும்ப ஒப்படைக்கும் விவகாரத்தில் நமது கவனம் இருக்கும்,” என்றார் திரு சைஃபுதின்.
சொத்துகளைத் திருப்பித் தரும் விவகாரம், லோவைத் தேடப்படுவதையும் அவரிடம் விசாரணை நடத்தப்படுவதையும் பாதிக்குமா என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் சைஃபுதின், “சொத்துகளைத் திரும்ப ஒப்படைக்கும் விவகாரமே எங்களது முதன்மை விருப்பம்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
1எம்டிபி சொத்துகளையும் நிதியையும் திரும்ப ஒப்படைக்கும் செயல்கள் முன்னர் இருந்த அரசாங்க காலத்தில் இருந்து தொடர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பல ஆண்டுகளாகத் தொடரும், சொத்துகளைக் கைப்பற்றும் விவகாரத்துக்கு உலகளவிலான தீர்வை எட்ட ரகசிய உடன்பாடு ஒன்றில் நீதித்துறை கையெழுத்து இட்டிருப்பதாக சேனல் நியூஸ் ஏஷியா (சிஎன்ஏ) தெரிவித்து உள்ளது.
லோவின் குடும்ப வழக்கறிஞர்களுடனும் அவர்களின் நிதி அறங்காவலர்களுடனும் ஜூன் தொடக்கப் பகுதியில் நீதித் துறை அந்த ரகசிய உடன்பாட்டில் கையெழுத்திட்டதாகவும் அது குறிப்பிட்டது. இதற்கு முன்னர் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட சொத்துகளைத் திரும்ப ஒப்படைப்பது தொடர்பானது அந்த உடன்பாடு எனவும் சிஎன்ஏ தெரிவித்தது.

