கோலாலம்பூர்: மலேசிய இந்திய காங்கிரசின் (மஇகா) உதவித் தலைவர்களுக்கான தேர்தல் மிகப் பரபரப்பாக நடைபெற்றது.
இதில் உதவித் தலைவர் பதவியை திரு எம். அசோஜன், திரு டி. முருகையா ஆகியோர் தக்கவைத்துக்கொண்டனர்.
மஇகா கல்விக் குழுவின் தலைவரான செனட்டர் ஆர். நெல்சன் உதவித் தலைவராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு, திரு நெல்சன், மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினராக இருந்தார்.
உதவித் தலைவர்களுக்கான தேர்தல் முடிவுகளை மஇகா தேர்தல் குழுத் துணைத் தலைவரும் சட்ட ஆலோசகருமான திரு எம். செல்வா ஜூலை 7ஆம் தேதியன்று அறிவித்தார்.
திரு அசோஜன் 8,633 வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றார்.
திரு முருகையா 8,566 வாக்குகளையும் திரு நெல்சன் 8,338 வாக்குகளையும் பெற்றனர்.
இதற்கு முன்பு உதவித் தலைவராக இருந்த திரு டி. மோகன் 8,280 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தேர்தலில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்கள் மட்டுமே உதவித் தலைவர்களாக நியமிக்கப்படுவர்.
அந்த வகையில், 58 வாக்குகள் வித்தியாசத்தில் உதவித் தலைவர் பதவியைத் திரு மோகன் இழந்தார்.
மஇகா செயலவை உறுப்பினர் பதவிக்கு 45 பேர் போட்டியிட்டனர். திரு ஆண்ட்ரூ டேவிட், தினாலன் ராஜகோபாலு, ரவீன் கிருஷ்ணசாமி, ஏ.கே. ராமலிங்கம், தலைமைச் செயலாளர் ஆர்.டி. ராஜசேகரன், திரு சிவசுப்பிரமணியம் உட்பட 21 பேர் வெற்றி பெற்றனர்.
வாக்களிப்பு ஜூலை 6ஆம் தேதியன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஇகா தலைமையகத்தில் நடைபெற்றது.
அண்மையில், மஇகாவில் தலைவர் பதவியை திரு எஸ்.ஏ விக்னேஸ்வரனும் துணைத் தலைவர் பதவியை திரு எம். சரவணனும் தக்கவைத்துக்கொண்டனர்.
அவர்கள் இருவரும் கட்சித் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.
மஇகா இளையரணித் தலைவராக திரு எஸ். சதீஷ் குமாரும் துணைத் தலைவராக திரு அமர்வீன் மலைராஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மஇகா மகளிர் அணியின் தலைவியாக ஜோகூர் மாநிலத்தின் கெமிலா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருவாட்டி என். சரஸ்வதியும் துணைத் தலைவியாக திருவாட்டி பி. தனலட்சுமியும் தேர்வு செய்யப்பட்டனர்.

