கெய்ரோ: போர் நிறுத்தம் தொடர்பான பரிந்துரையை ஹமாஸ் அமைப்பு கடந்த மே மாதம் முன்வைத்தது.
அதுதொடர்பாக இஸ்ரேலின் பதிலுக்காகக் காத்துக்கொண்டிருப்பதாக ஹமாஸ் அமைப்பின் இரண்டு அதிகாரிகள் ஜூலை 7ஆம் தேதியன்று கூறினர்.
காஸாவில் கடந்த ஒன்பது மாதங்களாகத் தலைவிரித்தாடும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முன்வைத்துள்ள திட்டத்தின் முக்கிய அம்சத்தை ஹமாஸ் அண்மையில் ஏற்றுக்கொண்டது.
“பேச்சுவார்த்தையை வழிநடத்துவோரிடம் எங்கள் தரப்பு கருத்துகளையும் பரிந்துரையையும் தெரிவித்துவிட்டோம். அவர்கள் இஸ்ரேலிடம் அதைத் தெரிவித்து விடுவார்கள். இனி இஸ்ரேலின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஹமாஸ் அதிகாரி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அந்த மூன்று கட்டத் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மே மாத இறுதியில் முன்வைத்தார். அதை ஏற்கும்படி இஸ்ரேலிடமும் ஹமாஸ் அமைப்பிடமும் பேச்சுவார்ததையை வழிநடத்தும் கத்தாரும் எகிப்தும் ஊக்குவிக்கின்றன.
போரை முடிவுக்குக் கொண்டுவந்து ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் கிட்டத்தட்ட 120 இஸ்ரேலியப் பிணைக்கைதிகளை விடுவிப்பதே திட்டத்தின் இலக்கு.
கத்தார் அதிகாரிகளுடன் இஸ்ரேல் கலந்துரையாடி வருவதாகப் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையுடன் தொடர்புடைய பாலஸ்தீன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“ஹமாஸ் முன்வைத்துள்ள பரிந்துரை பற்றி கத்தார் அதிகாரிகளுடன் இஸ்ரேலியர்கள் கலந்துரையாடினர். அதுகுறித்து இஸ்ரேலின் பதில் அடுத்த சில நாள்களில் தெரிவிக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்துள்ளனர்,” என்று அந்தப் பாலஸ்தீன அதிகாரி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
நிரந்தரப் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல்தான் முதலில் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும் ஹமாஸ் முன்பு தெரிவித்திருந்தது.
தற்போது இந்த நிபந்தனையை அது கைவிட்டுள்ளது.
அதற்கு மாறாக, முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தின் முதல் கட்டத்தின்போது பேச்சுவார்த்தையின் மூலம் போர் நிறுத்தத்தை எட்ட தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் அடுத்த வாரம் கத்தாருக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் உள்ள பள்ளி ஒன்று தகர்ந்தது.
போர் காரணமாகத் தங்கள் உடைமைகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கும் சில பாலஸ்தீன குடும்பங்கள், மத்திய காஸா முனையில் உள்ள அல் நுசைராட் பகுதியில் இருக்கும் அப்பள்ளிக் கட்டடத்தில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 6ஆம் தேதி நடத்தப்பட்ட இத்தாக்குதல் காரணமாக குறைந்தது 16 பேர் மாண்டதாகப் பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.
மாண்டோரில் பலர் சிறுவர்கள் என்று அப்பகுதியைச் சேர்ந்த பாலஸ்தீனர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று காஸா சிவில் அவசரநிலை சேவையின் செய்தித் தொடர்பாளர் திரு மஹ்முட் பசால் அச்சம் தெரிவித்துள்ளார்.

