பெட்டாலிங் ஜெயா: மலேசிய இந்திய காங்கிரசின் (மஇகா) கட்சித் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. கட்சித் தலைவராக திரு எஸ்.ஏ விக்னேஸ்வரனும் துணைத் தலைவராக திரு எம். சரவணனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மூன்று உதவித் தலைவர்களுக்கான போட்டி கடுமையாக இருந்தது. இதில் உதவித் தலைவர் பதவியை திரு எம். அசோஜன், திரு டி. முருகையா ஆகியோர் தக்கவைத்துக்கொண்டனர். மஇகா கல்விக் குழுவின் தலைவரான செனட்டர் ஆர். நெல்சன் உதவித் தலைவராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திரு அசோஜன் 8,633 வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றார். திரு முருகையா 8,566 வாக்குகளையும் திரு நெல்சன் 8,338 வாக்குகளையும் பெற்றனர்.
இதற்கு முன்பு உதவித் தலைவராக இருந்த திரு டி. மோகன் 8,280 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார். 58 வாக்குகள் வித்தியாசத்தில் உதவித் தலைவர் பதவியைத் திரு மோகன் இழந்தார்.
இந்நிலையில், தம்மை எதிர்த்து போட்டியிட்ட திரு நெல்சன் வெற்றி பெற, கட்சித் தலைவர் திரு விக்னேஸ்வரன் உதவியதாக திரு மோகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனால் கட்சித் தேர்தலின் நம்பகத்தன்மையில் கறை ஏற்பட்டுள்ளதாக அவர் குறைகூறினார்.
தேர்தல் குழுத் தலைவரான திரு விக்னேஸ்வரன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தது முறையல்ல என்றார் அவர்.
“நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே கட்சியின் விதிமுறையாகும். இந்த விதிமுறை மீறப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் மற்றும் கட்சித் தேர்தல் குழுத் தலைவர் என்கிற முறையில் திரு விக்னேஸ்வரன் பாரபட்சம் காட்டாமல், நடுநிலை தவறாமல் நடந்திருக்க வேண்டும்.
“தேர்தலில் தோல்வி அடைந்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் தோல்வி அடைந்தது பற்றி தெரியவந்ததும் மஇகா உறுப்பினர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றது எனத் திரு விக்னேஸ்வரன் ஒவ்வோர் இடமாகச் சென்று சொல்லக்கூடாது. நெல்சனுக்காக அவர் பிரசாரம் செய்தது, அவர் பாரபட்சத்துடன் நடந்துகொண்டார் என்பதை தெளிவாகக் காட்டுகிறது,” என்றார் 51 வயது திரு மோகன்.
தொடர்புடைய செய்திகள்
தேர்தலில் வெற்றி பெற்று மஇகாவின் உதவித் தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்ட மூவரைத் தவிர்த்து, நியமன உதவித் தலைவர்களாக இருவர் நியமிக்கப்படுவர்.
இந்த நியமன உதவித் தலைவர் பதவியை ஏற்கப்போவதில்லை என்றும் மஇகாவில் தொடர்ந்து உறுப்பினராக இருக்கப்போவதாகவும் திரு மோகன் கூறினார்.
இந்நிலையில், திரு மோகன் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கும் தமக்கும் எவ்வித தொடர்பு இல்லை என்று மஇகா தலைவர் திரு விக்னேஸ்வரன் மலேசிய ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் தாம் தலையிடவில்லை என்றும் உதவித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முடிவைக் கட்சியினரிடமே விட்டுவிட்டதாகவும் அவர் கூறினார். இதில் சொந்த விருப்பு, வெறுப்பு தமக்கு இல்லை என்றார் திரு விக்னேஸ்வரன்.
இருப்பினும், திரு நெல்சனுக்குச் சிறிதளவு ஆதரவு வழங்கியதாக அவர் ஒப்புக்கொண்டார். இதற்கான காரணத்தை அவர் கூறினார்.
கட்சித் தேர்தலுக்கு முன்பே திரு மோகன், திரு முருகையா, திரு அசோஜன் ஆகியோர் ஏற்கெனவே உதவித் தலைவர்களாக இருந்தவர்கள் என்றும் திரு நெல்சனைக் காட்டிலும் அவர்கள் மூவரும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும் திரு விக்னேஸ்வரன் கூறினார்.
இதைக் கருத்தில் கொண்டு உதவித் தலைவர் தேர்தலுக்குப் புதியவரான திரு நெல்சனுக்குக் கொஞ்சம் ஆதரவுக்கரம் நீட்டியதாக அவர் தெரிவித்தார்.