தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டி. மோகனை வீழ்த்தியது மிகப் பெரிய தவறு; முன்னாள் மஇகா தலைவர் சாடல்

3 mins read
c2e9a94b-07d0-46a4-9b49-0dbc17010a78
மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர் டாக்டர் எஸ். சுப்பிரமணியம் - படம்: மலேசிய ஊடகம்

பெட்டாலிங் ஜெயா: மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் டி. மோகனுக்கு வாக்களிக்காமல் அவரை வீழ்த்தியது மிகப் பெரிய தவறு என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் டாக்டர் எஸ். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்தியச் சமூகம் மீது அளவற்ற அக்கறையும் கடப்பாடும் கொண்ட ஒருசில மூத்த தலைவர்களில் திரு மோகனும் ஒருவர் என்று டாக்டர் சுப்பிரமணியம் கூறினார்.

திரு மோகன் தேர்தலில் தோல்வியைத் தழுவியது அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

மலேசிய இந்தியர்களின் நலனுக்காக 51 வயது திரு மோகன் அயராது உழைத்தவர் என்றும் அவரது பங்களிப்பு அளப்பரியது என்றும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் சுப்பிரமணியம் கூறினார்.

குறிப்பாக, மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் செழித்தோங்க திரு மோகன் பாடுபட்டவர் என்றார் அவர்.

“திரு மோகன், தனி ஆளாக இருந்து மலேசிய இந்தியர் காற்பந்துச் சங்கத்தை வலிமைமிக்க விளையாட்டுத்துறை அமைப்பாக உருமாற்றினார். அவரது அரும்பணிகள் காரணமாக அச்சங்கத்தின் குழு ஒருமுறை மலேசிய பிரிமியர் லீக்கில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது,” என்று ஃப்ரீ மலேசியா டுடே செய்தி நிறுவனத்திடம் டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

திரு மோகன் மஇகாவிலிருந்து விலகாதபடி மஇகா தலைவர்களும் உறுப்பினர்களும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“மலேசிய இந்தியர்கள் பல கடுமையான சவால்களை எதிர்கொண்டபோது அவர்களுக்காக திரு மோகன் குரல் கொடுத்தவர். அதுமட்டுமல்லாது சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று அவர்களுக்காகப் போராடியவர். அப்படி இருந்தும் அவரைத் தேர்தலில் தோற்கடித்துவிட்டனர். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் கோபமடையச் செய்துள்ளது,” என்றார் டாக்டர் சுப்பிரமணியம்.

திரு மோகனுக்கு ஏற்பட்ட தோல்வி, மஇகாவுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று அவர் கூறினார்.

டாக்டர் சுப்பிரமணியம் மஇகாவின் தலைவராக 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 2019ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

மஇகா கட்சித் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. மூன்று உதவித் தலைவர்களுக்கான போட்டி கடுமையாக இருந்தது. இதில் உதவித் தலைவர் பதவியை திரு எம். அசோஜன், திரு டி. முருகையா ஆகியோர் தக்கவைத்துக்கொண்டனர். மஇகா கல்விக் குழுவின் தலைவரான செனட்டர் ஆர். நெல்சன் உதவித் தலைவராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திரு அசோஜன் 8,633 வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றார். திரு முருகையா 8,566 வாக்குகளையும் திரு நெல்சன் 8,338 வாக்குகளையும் பெற்றனர்.

இதற்கு முன்பு உதவித் தலைவராக இருந்த திரு டி. மோகன் 8,280 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார். 58 வாக்குகள் வித்தியாசத்தில் உதவித் தலைவர் பதவியைத் திரு மோகன் இழந்தார்.

தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட திரு நெல்சன் வெற்றி பெற, கட்சித் தலைவர் திரு விக்னேஸ்வரன் உதவியதாக திரு மோகன் அதிருப்தி தெரிவித்தார்.

திரு மோகன் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கும் தமக்கும் எவ்வித தொடர்பு இல்லை என்று மஇகா தலைவர் திரு விக்னேஸ்வரன் மலேசிய ஊடகத்திடம் தெரிவித்தார்.

இருப்பினும், திரு நெல்சனுக்குச் சிறிதளவு ஆதரவு வழங்கியதாக அவர் ஒப்புக்கொண்டார். 

கட்சித் தேர்தலுக்கு முன்பே திரு மோகன், திரு முருகையா, திரு அசோஜன் ஆகியோர் ஏற்கெனவே உதவித் தலைவர்களாக இருந்தவர்கள் என்றும் திரு நெல்சனைக் காட்டிலும் அவர்கள் மூவரும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும் திரு விக்னேஸ்வரன் கூறினார்.

இதைக் கருத்தில் கொண்டு உதவித் தலைவர் தேர்தலுக்குப் புதியவரான திரு நெல்சனுக்குக் கொஞ்சம் ஆதரவுக்கரம் நீட்டியதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்