கொம்பாக்: இணையப் பகடிவதை காரணமாக மலேசியாவைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலமும் தன்னார்வலருமான ‘ஈஷா’ என்று அழைக்கப்படும் 30 வயது ராஜேஸ்வரி அப்பாஹு உயிரை மாய்த்துக்கொண்டார். ஜூலை 5ஆம் தேதியன்று தமது வீட்டில் அவர் மாண்டு கிடந்தார்.
அதற்கு ஒருநாள் முன்னதாக கோலாலம்பூரில் உள்ள டாங் வாங்கி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார். தாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகக்கூடும் என்றும் கொலை செய்யப்படக்கூடும் என்றும் அவர் அச்சம் தெரிவித்திருந்தார்.
டிக்டாக் தளத்தில் இருவர் தம்மைப் பகடிவதை செய்வதாக ராஜேஸ்வரி காவல்துறையினரிடம் கூறியதாக அறியப்படுகிறது.
தமது காணொளியை நேரடி ஒளிபரப்பு செய்தபோது ஒருவர் தம்மை வசைபாடியதாகவும் தமக்கு எதிராக மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜேஸ்வரி மரணமடைந்த பிறகு, 35 வயதுப் பெண் ஒருவரை மலேசிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்பெண் ஜூலை 10ஆம் தேதிவரை விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருப்பார்.
ராஜேஸ்வரியின் மரணம் மலேசியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில் தலைவிரித்தாடும் இணையப் பகடிவதைப் பிரச்சினையை ராஜேஸ்வரியின் மரணம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதாகப் பலர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஜூலை 7ஆம் தேதியன்று சிலாங்கூர் மாநிலத்தின் கொம்பாக் மாவட்டத்தில் ராஜேஸ்வரியின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
அதில் மலேசியாவின் தொடர்புதுறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில் கலந்துகொண்டு ராஜேஸ்வரியின் குடும்பத்தாரிடம் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
ராஜேஸ்வரியின் தாயாருக்கும் சகோதரிக்கும் அவர் ஆறுதல் கூறினார்.
இணையப் பகடிவதை விவகாரம் குறித்து ஜூலை 12ஆம் தேதியன்று அமைச்சரவைக் கூட்டத்தில் பேச இருப்பதாக அமைச்சர் ஃபாமி கூறினார். இணையப் பகடிவதையை எதிர்மறைக் கலாசாரம் என்று வருணித்த திரு ஃபாமி, மலேசியாவில் அது வேரூன்றி கடும் பாதிப்பு ஏற்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவித்தார்.
ராஜேஸ்வரிக்கு நடந்ததுபோல இனி வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்று செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் தெரிவித்தார். இத்தகைய துயரச் சம்பவம் மீண்டும் நிகழாதிருக்க உடனடியாகத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ராஜேஸ்வரியின் மரணத்துக்குக் காரணமானவர்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு அவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று அவர் குரல் எழுப்பினார்.