தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரசாரத்தைக் கைவிட பைடன் பிடிவாதம்

2 mins read
34ff207b-2607-4e14-a150-4ef0ff3c47c3
2024 மே 9ஆம் தேதி கலிஃபோர்னியாவில் நிதித் திரட்டிய அதிபர் ஜோ பைடன். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தான் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகப் போவதில்லை என்று மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஜனநாயகக் கட்சியினர் அவர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். இல்லையென்றால் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலிலும் நாடாளுமன்றத்திலும் பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்று கட்சிக்காரர்கள் கூறுகின்றனர்.

ஆனால் கட்சிக்காரர்களின் கவலைகளை பைடன் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. முன்வைத்த காலை பின் வாங்கப் போவதில்லை என்பது போல அறுதியிட்டுக் கூறி வருகிறார்.

தனது திறமை மீது யாருக்காவது சந்தேகம் இருந்தால் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் தன்னை எதிர்க்கலாம் என்று அவர் சவால் விடுத்துள்ளார்.

“நான் எங்கேயும் போக மாட்டேன்,” என்று எம்எஸ்என்பிசி காலை நேர நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் பைடன் கூறினார்.

பின்னர் நன்கொடையாளர்களையும் தனிப்பட்ட முறையில் அழைத்து தனது உறுதியை அவர் மறுவுறுதிப்படுத்தினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 27ஆம் தேதி அன்று முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் நடைபெற்ற விவாதத்தின்போது பைடன் ஒரு சில இடங்களில் தடுமாறியதால் அவர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

அடுத்த நாலரை ஆண்டுகளுக்கு அவரால் திறம்பட செயல்பட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் பைடனுக்குச் செல்வாக்கும் குறைந்து வருகிறது.

தற்போது 51-49 என்ற நிலையில் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் செனட் சபை உள்ளது. இதனை தக்க வைத்துக் கொள்வதும் பிரதிநிதிகள் சபையை மீண்டும் கைப்பற்றுவதும் இயலாமல் போய்விடும் என்பதும் ஜனநாயகக் கட்சியின் கவலையாகும்.

ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளில் ஒருவரான ஆடம் ஸ்மித், பைடன் ஒதுங்க வேண்டும் என்று கடுமையாக அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டார்.

மற்றொரு ஜனநாயகக் கட்சி பிரதிநிதியான ஜோ மோரெல், பைடனுக்கு அதிபராகச் செயல்படும் ஆற்றல் இல்லை என்று தன்னிடம் பல கட்சிக்காரர்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

டிரம்ப்புடனான விவாதத்தில் தனது செயல்திறன் குறித்த கவலைகளை பைடன் எப்படி போக்குவார் என்பதே மிகப் பெரிய கேள்வி என்று செய்தியாளர்களிடம் ஜோ மோரெல் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்